பெரம்பலூர் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ளது சிறுவாச்சூர். இந்த ஊரில் பிரபலமான மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில், மாநிலங்களிலிருந்தும் இக்கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கு பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்தக் கோவிலிலிருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் மலையடிவாரத்தில் இயற்கை சூழ்ந்த இடத்தில் பெரியசாமி, செங்கமல சாமி மற்றும் அதன் துணை தெய்வங்களாக கன்னிமார் சிலைகள், செல்லியம்மன் சிலை, கருப்புசாமி சிலை ஆகியவற்றைக் கொண்ட கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிலைகளை மர்ம கும்பல் ஒன்று கடந்த 4ஆம் தேதி இரவு அடித்து உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது.
4ஆம் தேதி காலை பூசாரி ரங்கநாதன் கோவிலுக்குச் சென்று பூஜைகளை முடித்துவிட்டு மாலை ஆறு மணி அளவில் சிறுவாச்சூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்துவிட்டார். பிறகு அமாவாசை அன்று (6ஆம் தேதி) காலை ரங்கநாதன் பூஜை செய்வதற்காகக் கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்தக் கோவிலின் பத்துக்கும் மேற்பட்ட சாமி சிலைகள், மற்றும் கடவுளின் வாகனங்கள் அனைத்தும் உடைத்து சேதப்படுத்தப்பட்டு அலங்கோலமாகக் கிடந்துள்ளன.
இதேபோல் சிறுவாச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இரண்டு கோயில் சிலைகளையும் மர்ம கும்பல் சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஊர் மக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அறநிலையத்துறை செயல் அலுவலர் அருண்பாண்டியன், பெரம்பலூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து கோயில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் மர்மமான முறையில் சுற்றிக்கொண்டிருந்த நபரை ஊர் மக்கள் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசுவதாகக் கூறப்படுகிறது. இதில் முறையான நடவடிக்கை தேவை. சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சிறுவாச்சூர் கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி, சிலைகளை சேதப்படுத்தியவர்களை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
மலையடிவாரத்தில் இருந்த செங்கமலையான், பெரியசாமி, செல்லியம்மன், கன்னிமார்கள் மற்றும் இவர்களின் வாகனங்களான குதிரைகள், யானை போன்ற சிலைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியைச் சேர்ந்த சிற்பி குப்புசாமி தலைமையிலான குழுவினர் செய்தனர். அவர்கள், இக்கோவில் பகுதிக்கே வந்து சிலைகளை செய்வதற்கு உரிய மண்ணை தேர்வு செய்து, சிலைகளை அதே இடத்தில் சுடுமண் சிலையாக செய்துவைத்தனர். ஆசியாவிலேயே மிக உயரமான சுடுமண் குதிரை சிலை பண்ருட்டி அருகே உள்ளது. அதைவிட உயரமான சுடுமண் சிலையை செங்கமலையான் பெரியசாமி கோவில் வளாகத்தில் செய்து வைத்திருந்தனர். பலரையும் கவரும் வண்ணத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த சிலைகளைக் காண்பதற்கும், வழிபாடு செய்வதற்கும் அதிகளவிலான மக்கள் வந்துசெல்வார். அப்படி பிரம்மாண்டமான இந்த சிலைகளை சேதப்படுத்தியுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.