சிதம்பரம் அருகே புது பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் இளவழகி இளையராஜா. கடந்த வெள்ளிக்கிழமை இவரது வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த இவரது மாடு காணாமல் போனது. இந்நிலையில் மாடு காணவில்லை என சனிக்கிழமையென்று அவர் அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் தேடி உள்ளார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள வயலில் மாட்டு தலை தனியாகவும், அதன் குடல்கள் மற்றும் தோல், வால் என கடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்தார். காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இளவழகி கூறுகையில் ''கடந்த சில நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புது பூலாமேடு, சிவாயம் கிராமங்களில் இரவு நேரங்களில் மாடுகளின் தலைகளை வெட்டி கறியை மட்டும் எடுத்துக் கொண்டு குடல், தோல் உள்ளிட்டவற்றை வயல்வெளிகளில் வீசி சென்று விடுகிறார்கள். இதனால் பெருத்த மன உளைச்சல் ஏற்படுகிறது. மாட்டை அப்படியே ஓட்டி சென்றாலும் பரவாயில்லை இப்படி அநியாயமா கொலை செய்து மாட்டு உரிமையாளர்கள் கண் முன்னே போடுவது வேதனை அளிக்கிறது. அதே போல் இந்த பகுதியில் 10 -க்கும் மேற்பட்ட மாடுகள் வெட்டப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினார். இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாட்டு தலையுடன் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.