திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூண்டு வியாபாரியான சின்னதம்பி. இவர், கடந்த மாதம் வியாபாரத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், திடீரென வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி போன்ற ஆயுதங்களால், சின்னதம்பியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த சின்னதம்பி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, அந்த வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த யுவராஜ் குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருதுநகரில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். அதே சமயம், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டபோது இவர்கள் இருவருக்கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், யுவராஜும் விக்னேஷும் கடந்த மாதம் 22ம் தேதியில் இருந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சின்னதம்பி கொலைக்கு பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், 10 பேர் கொண்ட மர்ம கும்பல் 17ஆம் தேதியன்று விருதுநகர் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளனர். அப்போது, அந்த மருத்துவமனையின் 4வது தளத்தில் சிகிச்சையில் இருந்த யுவராஜ் குமார் மற்றும் விக்னேஷை கொலை செய்ய திட்டமிட்ட மர்ம கும்பல், திடீரென உள்ளே நுழைந்து அங்கு துப்பாக்கியுடன் காவலில் இருந்த திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை காவலர்களான சிலம்பரசன் மற்றும் அழகுராஜ் ஆகியோர் முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசியுள்ளனர்.
அதன்பிறகு, படுக்கையில் இருந்த யுவராஜ் குமார் மீதும் விக்னேஷ் மீதும் மிளகாய்ப் பொடியை வீசிய மர்ம கும்பல், அந்த வார்டுக்குள் வைத்து அவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நோயாளிகளும் பொதுமக்களும் அங்கிருந்து அலறியடித்து ஓடத் தொடங்கியுள்ளனர். பின்னர், சுதாரித்துக்கொண்ட காவலர்கள், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து குற்றவாளிகளை குறிவைத்துள்ளனர்.
இதனால் பதற்றமடைந்த மர்ம கும்பல், காவலர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மேலும், இச்சம்பவத்தால் மருத்துவமனை முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த விருதுநகர் கிழக்கு போலீசார், காயமடைந்த யுவராஜ், விக்னேஷ் மற்றும் காவலர்கள் ஆகியோரை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்ம கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.