சென்னையில் பா.ஜ.க. சார்பில் ‘என் மண் என் தேசம்’ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு பா.ஜ.க.வின் மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “பிரதமர் நரேந்திர மோடியின் உணர்வில் உதித்த மாபெரும் சிந்தனை. இந்த நாட்டின் விடுதலைக்காக, மாண்பைக் காப்பதற்காக, பண்பாட்டை காப்பதற்காக, கலாச்சாரத்தைக் காப்பதற்காக, இந்த மண்ணின் பெருமையைக் காப்பதற்காக எவரெல்லாம் உழைத்தார்களோ அவர்களின் அத்தனை பேர்களின் வாழ்விடங்களில் இருக்கக் கூடிய அவர்களின் கால்பட்ட மண்ணை கலசங்களில் டெல்லிக்கு எடுத்துச் சென்று அதனை எல்லாம் சேர்த்து மாபெரும் நினைவுச் சின்னத்தை எழுப்ப வேண்டும். 140 கோடி மக்களும் வணங்கக் கூடிய பொது இடமாக அதனை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘என் மண்; என் தேசம்’ எனும் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.
தொடர்ந்து அவரிடம் பா.ஜ.க. மையக்கூட்டம் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்த நிகழ்ச்சி (என் மண் என் தேசம்) குறித்து கேளுங்கள் சொல்கிறேன்” என்று தெரிவித்துவிட்டுச் சென்றார்.