
வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு புகாரில், அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.சி. வீரமணியின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் தங்கம், வைரம், வெள்ளிப் பொருட்கள், பணம், வெளிநாட்டு டாலர்கள், சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து விளக்கமளித்த கே.சி. வீரமணி, "என்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் 40 ஆண்டுகள் பழமையானது; அதன் விலை ரூபாய் 5 லட்சம் மட்டுமே. நான் ஆடம்பரத்தை விரும்பாதவன். கட்டி கட்டியாக தங்கம், வைரம் எனக்கு எதுக்கு? நான் ஏழாவது படிக்கும்போதே எனக்குப் பென்ஸ் காரை தந்தை வாங்கித் தந்துள்ளார்.” என்றார். மேலும், வீடு கட்டுவதற்காக மணல் வாங்கி வைத்துள்ளதாகவும், அதற்கு அரசின் ரசீது இருப்பதாகவும் தெரிவித்தார்.