எந்த சமுதாயத்தையும் நான் இழிவுபடுத்திப் பேசுவதில்லை, ரஜினி குறித்து நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வருத்தம் தெரிவித்துள்ளார்.
நதிகள் இணைப்பு என்கிற திட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தில் ரஜினிகாந்த ஆட்சியை பிடிக்க முடியாது, காரைக்குடி ஆச்சியை வேண்டுமானாலும் பிடிக்கலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சு, காரைக்குடி நகரத்தார் சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கண்டன குரல்கள் எழுந்தன.
இந்நிலையில், இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நகரத்தார் சமூகத்தினரை மதிப்பவர்கள் நாங்கள். காரைக்குடி ஆச்சி தொடர்பான எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் நான் பேசவில்லை. அந்த கருத்தினால் நகரத்தார் சமூகத்தினரின் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன். நான் மனோகர் அம்மா ஆச்சியை வைத்து தான் கூறினேன்.
ஆட்சி, அதிகாரம் என்பது மக்களால் வழங்கப்படுவது, மக்கள் தான் எஜமானர்கள். நகரத்தார் மனதை புண்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.