சென்னை கொடுங்கையூரில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திருவள்ளூர் மாவட்டம், அலமாதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, செங்குன்றத்தில் உள்ள கூட்டாளியிடம் நகைகள் இருப்பதாக கூறியதாகவும், அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்றும் நகைகளை மீட்க முடியவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், ராஜசேகரை கொடுங்கையூர் புறக்காவல் நிலையத்தில் வைத்து காலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, திடீரென உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த மருத்துவமனை அறிவுறுத்தலின் பேரில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் ராஜசேகர் உயிரிழந்துவிட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ராஜசேகர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றன. ராஜசேகரின் சந்தேக மரணம் தொடர்பான வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதோடு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகனின் மரணம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராஜசேகரின் தாய், ''மார்ல எட்டி உதைச்சிருக்காங்க... ரத்தம் ரத்தமா வாந்தி எடுத்துருக்கான். ரத்தம் கொப்பளிக்குது. கால ஓடிச்சுருக்காங்க, விரல ஓடிச்சுருக்காங்க... ஒரு கிலோ மாட்டுக்கறி திம்பான்பா என் பையன். ஒரு கிலோ மாட்டுக்கறி ஒரு கிலோ சோறு சாப்பிடுவான். அப்படி சாப்பிட்ட பையனுக்கு எப்படிப்பா ஃபிட்ஸ் வரும்'' என ஆவேசமாகக் கத்தினார்.