
தமிழ்நாட்டில் ஜாதி, மதங்கள் கடந்த மதநல்லிணக்க சகோதரத்துவம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனை உறுதிப்படுத்தும்விதமாக இன்று நடந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் பூரணம் - புஷகலாம்பாளுடன் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழா ஒரு நாள் முன்னதாக இன்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் உள்ளனர். கடல் கடந்து பல வெளிநாடுகளிலும் பக்தர்கள் உண்டு. பக்தர்கள் எங்கிருந்தாலும் மாசிமகத் திருவிழாவிற்கு வந்துவிடுவார்கள். இந்தக் கோயிலில் வேண்டுதல் வைக்கும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் நேர்த்திக்கடனாக கோயில் முன்பு அமைந்துள்ள அய்யனாரின் வாகனமான ஆசியாவில் உயரமான சிலையாக கருதப்படும் 33 அடி உயர வெள்ளைக் குதிரை சிலைக்கு அதே உயரத்தில் பூ மாலை அல்லது காகிதப் பூ மாலைகள் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 ஆயிரம் மாலைகள் வரை நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. ஆண்டுக்காண்டு மலைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளது. இதில் 90% காகிதப் பூ மாலைகளே அணிவிக்கப்படுகிறது. குதிரை சிலைக்கு மாலைகள் அணிவிக்கும் அழகைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
இந்த நிலையில் நாளை மாசிமகம் என்றாலும் பக்தர் மாலை காணிக்கை செலுத்த வசதியாக இன்று காலை முதல் மாலையாக ஊர் மாலை அணிவிக்கப்பட்ட பிறகு அமைச்சர் மெய்யநாதன் குடும்பத்து மாலை அணிவித்து தொடர்ந்து பக்தர்களின் மாலைகள் அணிவிக்கப்பட்டு வருகிறது. காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வந்தாலும் மாலைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மதிய நேரத்தில் மழை சற்று ஓய்ந்த நேரத்தில் ஒரு காரில் வந்த ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் கோயில் முன்பு காரில் வரும் போதே கையெடுத்துக் கும்பிட்டபடியே வந்து குதிரை சிலை எதிரில் நிறுத்தி தாங்கள் நேர்த்திக்கடன் செலுத்த காருக்குள் கொண்டு வந்த பெரிய காகிதப் பூ மாலையை காணிக்கையாக செலுத்தினர். உயரமான குதிரை சிலைக்கு மாலை கயிறு கட்டி இழுத்து குதிரை சிலை கழுத்தில் அணிவிக்கப்பட்ட பிறகு பக்தியோடு தரிசனம் செய்து சென்றனர்.
இதே போல கீரமங்கலத்தில் ஜவுளிக்கடை நடத்தும் ஒரு இஸ்லாமியர் கோயில் குதிரை முன்பு வணங்கி சிதறு தேங்காய் உடைத்துச் சென்றார். இதே போல கீரமங்கலம் மேற்கு பேட்டை பகுதி ஜமாத்தார்கள் பல வருடங்ளாக பக்தர்களுக்கு குடிநீர் வழங்கி வருகின்றனர். குளமங்கலம் பெரங்காரையடி மிண்ட அய்யனார் கோயிலில் இஸ்லாமியர்களின் நேர்த்திக்கடன் செலுத்திச் செல்வதை பொதுமக்கள் நெகிழ்ச்சியாகப் பார்க்கின்றனர்.