தமிழகத்தில் இன்னும் மத நல்லிணக்கம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை சகோதர பாசத்தோடு வலுப்படுத்தி வருகிறார்கள் இந்துக்களும் இஸ்லாமியர்களும். இதனை மேலும் மெய்ப்பிக்கும் சான்றாக ஒரே நேரத்தில் இரு நிகழ்வுகள் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் எழுந்தருளியுள்ள பட்டவைய்யனார், கருப்பர், கொம்புக்காரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான கருங்கல்லால் ஆலயம் எழுப்பப்பட்டு குடமுழுக்கு நடத்த நாள் குறிக்கப்பட்டதும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு நேரில் சென்று அழைப்புக் கொடுத்தனர். யாகசாலை பூஜைகள் தொடங்கியது. புனித நீர் எடுத்துவரும் நிகழ்வில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். திங்கள் கிழமை குடமுழுக்கு நடக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியத்திலிருந்து சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் சீர் கொண்டு செல்லும் நிகழ்வு நடந்தது.
கீரமங்கலம் மேற்கு பேட்டை பள்ளிவாசலிலிருந்த ஜமாத்தார்கள் தேங்காய், காய், கனி, பூ, வெற்றிலை பாக்கு, பணம் வைத்து 21 தட்டுகளுடன் நாட்டிய குதிரைகளின் ஆட்டத்துடன் விண்ணதிரும் வானவேடிக்கைகளுடன் சுமார் 3 கி மீ நடந்து ஊர்வலமாகச் சென்றனர். பட்டவையனார் கோவில் வளாகத்தில் செண்டை மேளம் முழங்க நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள் என விழாக்குழுவினர் இருகரம் கூப்பி வரவேற்றதுடன் மாலை அணிவித்து சந்தனம், பூ, கற்கண்டு கொடுத்து வரவேற்று கோவில் கல் மண்டபத்தில் அமர வைத்தனர். சீரோடு கொண்டுவந்த பணத்தை விழா குழுவினரிடம் ஜமாத்தார்கள் வழங்கினார்கள்.
இதேபோல காசிம்புதுப்பேட்டை ஜமாத்தார்களும் சீர் கொண்டு வந்தனர். தமிழகம் முழுவதுமே இந்துக்களும் இஸ்லிமியர்கள் எப்போதுமே சகோதர பாசத்துடன் தான் வாழ்கிறோம். கீரமங்கலம் பகுதி கிராமங்களில் எங்கள் பள்ளிவாசல் நிகழ்வுகளில் கிராமத்தினர் கலந்து கொள்வதும், இந்துக்களின் கோவில் நிகழ்வுகளில் ஜமாத்தார்கள் கலந்து கொள்வதும் பலதலைமுறைகளாக வழக்கமாக உள்ளது. அண்ணன் - தம்பி, மாமன் - மச்சான் உறவில்தான் இப்போதும் இருக்கிறோம். இதயப்பூர்வமான உண்மையான மத நல்லிணக்கத்தோடு வாழ்கிறோம். தொன்றுதொட்டு வரும் இந்த வழக்கம் இன்னும் பல தலைமுறைகளுக்கு வாழும். இன்று எங்களை வரவேற்றவிதம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. உறவுகளை வரவேற்பதை பார்க்கிறோம் என்றனர் நெகிழ்ச்சியாக.
இதே போல பொன்னமராவதி அருகில் உள்ள கேசராப்பட்டி கிராமத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் மறுசீரமை்புடன் திறப்பு விழா நடந்த போது அப்பகுதி இந்துக்கள் பிடாரியம்மன் ஆலயத்திலிருந்து சீர்கள் எடுத்துச் சென்றனர். பள்ளிவாசல் நிர்வாகிகள் இன்முகத்தோடு வரவேற்று சீர்களை பெற்றுக் கொண்டு மதநல்லிணக்கத்திற்காக சிறப்புத் தொழுகையும் செய்து நெகிழச் செய்தனர்.
இப்படி தமிழகத்தில் இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவர் என்ற பிரிவினையை யாராலும் செய்ய முடியாது என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் சான்றாக உள்ளது.