முன்னால் இந்திய பிரதமர் இராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட்பயாஸ் என 7 பேர் சிறையில் உள்ளனர். இதில் ஆயுள்தண்டனை கைதிகளாக ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட்பயாஸ், தூக்குதண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.
இரண்டு ஆயுள்தண்டனையை அனுபவித்துவிட்டோம் எங்களை விடுதலை செய்யுங்கள் என ஒவ்வொருவரும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இறுதியில் தமிழக அரசே முடிவெடுத்துக்கலாம் என கூறிவிட்டது.
அந்த தீர்ப்பு வந்து சில மாதங்கள் ஆன நிலையில், அவர்களை விடுதலை செய்யலாம் என தமிழகத்தை ஆளும் அரசின் அமைச்சரவை தீர்மானம் இயற்றி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பிவைத்தது. அவர் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த 4 மாதமாக கிடப்பில் வைத்துள்ளார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென பல தமிழ் அமைப்புகள், முக்கிய அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தும் இதுவரை கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தங்கள் விடுதலை குறித்து கவர்னர் முடிவு எடுக்க வேண்டுமென வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகன் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக நாம் விசாரித்தபோது, வேலூர் ஆண்கள் சிறையில் முருகனும், பெண்கள் சிறையில் நளினியும் உள்ளனர். கணவன் – மனைவியான இருவரும் 15 தினங்களுக்கு ஒருமுறை பெண்கள் சிறையில் சந்தித்து உரையாடுவார்கள். அதன்படி ஜனவரி 19ந்தேதி காலை நளினி – முருகன் சந்திப்பு 1 நேரம் நடைபெற்றது.
மனைவியை சந்தித்துவிட்டு சிறைக்கு திரும்பிய முருகன், சிறை கண்காணிப்பாளரிடம், தனது விடுதலை குறித்து கவர்னர் முடிவெடுப்பதில் தாமதப்படுத்துவதால் உடனே முடிவெடுக்க வேண்டுமெனக்கேட்டு உண்ணாவிரதம் இருக்கிறேன் என ஜனவரி 19ந்தேதி மதிய உணவை மறுத்து உண்ணாவிரதத்தை தொடங்கினார். இரவும் உணவை மறுத்துவிட்டார்.
சிறைவிதிகளின் படி 2 வேளை உணவை எடுத்துக்கொள்ளவில்லையென்றால் உண்ணாவிரதத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். அதன்படி ஜனவரி 20ந்தேதி சிறைத்துறை சார்பில், முருகன் உண்ணாவிரதம் இருப்பதை அங்கீகரித்து அதிகாரபூர்வமாக தெரியப்படுத்தியுள்ளனர். சிறை அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.