இன்று அதிகாலை 3.30 மணிக்கு நெல்லை அருகில் உள்ள மேலப்பாளையம் அமுதாபிட் தெருவிலுள்ள சுமார் 8 வயது சிறுமி இரவு நேரம் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்த போது மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்று விட்டார். இதை கண்ட சிறுமியின் தாய் சத்தம் போடவே அலறல் சத்தம் கேட்ட த.மு.மு.க.வின் இளைஞர் அணி செயலாளர் யூசுப் விரைந்து சென்று அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து சிறுமியை மீட்டனர்.
மர்ம நபரை விசாரித்த போது அவர் பாளை செட்டிகுளத்தை சேர்ந்த ஜஸ்டின் என்பது தெரிய வந்தது. அவர் கட்டுமான வேலைக்காக அந்தப் பகுதியில் தங்கியிருப்பவர். பிறகு காவல் நிலையத்தில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க கோரினர். காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் தாமதித்தனர்.
இந்நிலையில் மமக பகுதி தலைவர் மைதீன் பாதுஷா செயலாளர், காஜா, மாவட்ட துணை செயலாளர் பெஸ்ட் ரசூல், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் கனி , ஊடக அணி செயலாளர் ஜாபர் ஆகியோர் தலைமையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜனிடம் த.மு.மு.க. மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதியளித்து விசாரணைக்காக மகளிர் காவல்நிலையத்திற்கு சிறுமியை அனுப்பி வைத்தார்.