பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தைப்பூசத்திற்காக காரைக்குடி, தேவகோட்டை, மேலூர், மதுரை, திருச்சி, தேனி, பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர் உள்பட பல பகுதிகளில் இருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசித்து செல்வது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ராக்கால பூஜைக்கு பின் கிராமசாந்தி பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தெற்கு ரத வீதி மேற்கு ரத வீதி சந்திப்பில் உள்ள அபரஞ்சி விநாயகர் கோவிலில் வாஸ்து சாந்தி பூஜை பெரியநாயகி அம்மன் கோவில் முன்புள்ள தீபஸ்தம்பம் அருகே புனித மண் எடுத்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த தைப்பூசம் விழா பத்து நாட்கள் நடைபெறும்.
இந்த திருவிழாவில் முதல் நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை புண்ணியாக வாசனம் மதிய உறக்கம் நடைபெறும். கொடிப்படம் நான்கு ரத வீதிகளில் வலம் வருதல் நிகழ்ச்சியும் முத்துக்குமார சுவாமி மண்டபத்தில் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானைக்கு 16 வகை அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்று கொடி படத்துக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அதன் பின் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அதன்பின்னர் விநாயகர் பூஜை கஜ பூஜை தீபாராதனையும் நடைபெற்றன. அதன் பின் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் முருக பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர்.
. இந்த விழாவில் வருகிற 20-ஆம் தேதி திருக்கல்யாணமும் 21ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து 24 ம் தேதி தெப்ப உற்சவத்துடன் தைப்பூசம் திருவிழா பழநியில் நிறைவு பெறுகிறது.
இந்த தைப்பூச கொடியேற்று விழாவில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், அலுவலக மேலாளர் உமா, செயற்பொறியாளர் சக்திவேல், சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர் சிவனேசன், உரிமையாளர் செல்வகுமார் மற்றும் பழனி நகராட்சி ஆணையாளர் நாராயணன், டிஎஸ்பி விவேகானந்தன் உள்பட அதிகாரிகளும் பழனி நகர் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.