திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் சி.எல் சாலையில் உள்ள காவாகரை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு 7 வயதில் ஹரிஷ் என்கிற மகன் இருந்தான். இவர்களது வீட்டுக்கு அருகில் வாரச்சந்தை மைதானம் உள்ளது. இந்த மைனத்தின் ஓரத்தில் நகராட்சி குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி உள்ளது. இந்த நீர்தேக்க தொட்டி அருகே குழாய் மூலம் தண்ணீர் பிடிக்க குடிநீருக்காக ஒரு பள்ளம் தோண்டப்பட்டு இருந்துள்ளது.
மே 31ந் தேதி மதியம் வீட்டுக்கு வெளியே இந்த மைதானத்தில் சக குழந்தைகளுடன் ஹரிஷ் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் இந்த குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருந்துள்ளது. அந்த பள்ளத்தில் விளையாடிக்கொண்டு இருந்தபோது, கவனக்குறைவாக விழுந்துள்ளான். அந்த பள்ளம் ஆழமாக இருந்ததால் உள்ளே விழுந்த ஹரிஷ் மேலே வரமுடியாமல் தண்ணீில் மூழ்கி இறந்துள்ளான்.
விளையாடிக்கொண்டு இருந்த ஹரிஷ் காணவில்லையென சக குழந்தைகள் கத்த, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, பள்ளத்தில் ஹரிஷ் விழுந்து இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியாகினர். ஹரிஷ்சின் பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களையும் கலங்கவைத்தது.
இதுதொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, உடலை ஒப்படைத்தனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி ஊழியர்களின் அலட்சியம் ஒரு குழந்தையின் உயிரை பலிவாங்கிவிட்டது.