வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான சர்வதேச மாநாடு திருப்பூரில் வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள நிலையில் அதுகுறித்த ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர்,
வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக நடத்தப்படும் மாநாட்டில் 68 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். வரலாற்றில் புதிய திருப்பமாக நான்கு ஆண்டு மோடி ஆட்சி முன்னேற்றத்திற்கான உந்துதலை தரும் ஆட்சியாகவும் உலகம் முழுவதும் பாரத தேச கருத்துக்களுக்கு உரிய மரியாதையை கொடுக்கும் அரசாக திகழ்கிறது.
நடிகர் கமலஹாசன் கபினியில் தண்ணீர் திறந்து உள்ள கர்நாடக முதல்வருக்கு நன்றி கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்த கர்நாடக முதல்வர் குமாரசாமி காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது எனவும், ஸ்ரீரங்கநாதரிடம் தான் வேண்டியுள்ள படி கர்நாடகாவில் மழை பெய்தால் காவிரியில் தண்ணீர் தர இயலும் என கூறினார். எனவே நடிகர் கமல்ஹாசன் காவிரியில் தண்ணீர் திறந்ததற்கு நன்றி கூற வேண்டும் என நினைத்தால் அதற்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
பிரிவினைவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய அரசாக தமிழக அரசு திகழ்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க தயங்காத தமிழக அரசு வைகோ, சீமான், திருமுருகன் காந்தி போன்றோரை போற்றி பாதுகாப்பதன் காரணம் என்ன. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பு வராத நிலையில் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் வழக்கை வாபஸ் பெறப்போகிறேன் என அறிவித்திருப்பது எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பெரும் குழப்பம் ஏற்படுத்தும் இயக்கமாக அவர்கள் இயக்கம் இருக்கிறது எனவும் கூறியதுடன் பணத்தின் மூலம் வெற்றி பெறலாம் என நினைத்தால் எந்த இயக்கம் என்றாலும் தோல்வியில் தான் முடியும் என கூறினார்.