திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சியில் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் ஒரு கோஷ்டியும். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் மற்றெரு கோஷ்டியும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் பழனியில் உள்ள விஸ்வநாதன் ஆதரவாளர்களான ஜெ.பேரவை நகர துணை செயலாளர் ராஜாமுகமது மற்றும் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் சதீஸ்குமார் தலைமையிலான ர.ர.க்கள் பலர் தங்கள் படங்களை போட்டு அதிமுகவின் கடைகோடி தொண்டர்கள் என்ற வரிகளுடன் பழனி நகரில் உள்ள பல இடங்களில் தீபாவளி வாழ்த்துகள் கூறி பிளக்ஸ் பேனர்களை வைத்து இருக்கிறார்கள். அதில் சிட்டிங் அமைச்சர் சீனிவாசன் மற்றும் மாவட்ட செயலாளரான மருதராஜ் படங்களை போடாமலேயே பிளக்ஸ் பேனர்களை வைத்துத்திருப்பதை கண்டு சீனி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
அதோடு இந்த விஷயம் மாவட்ட கழகத்திற்கு எட்டியதின் பேரில் திண்டுக்கல்லில் உள்ள மாநகர பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர் சீனிவாசன் மகனான ராஜ்மோகன் மற்றும் மாவட்டசெயலார் மருதராஜ் மகனான பிரேம் ஆகியோர் கொண்ட திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி என்ற பெயரில் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என பிளக்ஸ் பேனர்களை அடித்து நகரில் பல இடங்களில் வைத்து இருக்கிறார்கள். அதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது மச்சான் கண்ணன் படத்தை போடாமல் ஓரம் கட்டி விட்டனர். அதைக்கண்டு நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.
இதுபற்றி அமைச்சர் சீனிவாசன் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்ட போது... முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அரசியலுக்கு கொண்டு வந்து அம்மாவிடம் சொல்லி நத்தம் இடைத்தேர்தலில் சீட் வாங்கி கொடுத்து வெற்றிபெற வைத்தார் அதற்காக அண்ணன் சீனிவாசனுக்கு நன்றி சொன்னார்.
அதன் பின் அம்மாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டு முப்பெரும்துறை அமைச்சராக வந்தவுடனே ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது போல் அண்ணன் சீனிவாசனை விஸ்வநாதன் கண்டு கொள்வதில்லை அப்படி இருந்தாலும் கூட அண்ணன் சீனிவாசன் தானே சென்று கட்சி கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிளும் கலந்து கொள்வார் அப்படி கலந்து கொண்டாலும் நத்தம் விஸ்வநாதன்அவரது காரில் கூட ஏற மாட்டார் அந்த அளவுக்கு அண்ணன் சீனியை ஓரம்கட்டி வந்தனர்.
வேறு ஒரு அரசியல்வாதி என்றால் கட்சியே வேண்டாம் என ஓடி இருப்பார். ஆனால் அண்ணன் சீனி அம்மாவுக்காகவும், கட்சிவளர்ச்சிக்கும் தொடர்ந்து இருந்து வந்ததால்தான் அம்மா திண்டுக்கல் தொகுதிக்கு சீட் கொடுத்து வெற்றிபெற வைத்து வனத்துறை அமைச்சர் பதவியையும் கொடுத்தார். அப்படி இருந்தும் கூட அண்ணன் சீனி பலசை எல்லாம் நினைக்காமல் விஸ்வநாதனை அனைத்து கட்சி கூட்டத்துக்கு கூப்பிட்டு கொண்டுதான் வருகிறார். அவர்தான் சரிவர வராமல் இகோ பார்த்து கொண்டு தனக்கு என ஒரு கோஷ்டியை உருவாக்கிக் கொண்டு செயல்படுகிறார். அது போல் கோடை விழாவிற்கு முதல்வர் வந்தபோது முதல்வர் எடப்பாடியை வாழ்த்தி பேனர்கள் வைத்தார். அதில் அமைச்சர் சீனிவாசன் படத்தை போடவில்லை இந்த விஷயம் தெரிந்து எடப்பாடி சத்தம் போட்ட பிறகு பேப்பரில் ஒரு கால் பக்கம் விளம்பரம் கொடுத்து அமைச்சர் சீனிவாசன் படத்தை போட்டார். அப்படி இருந்தும் கூட தொடர்ந்து அமைச்சர் சீனிவாசனுக்கு எதிராக அரசியல் பண்ணவேண்டும் என்ற நோக்கத்தில்தான் மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு அமைச்சர் சீனிவாசன் படத்தையும், பெயரையும் போட கூடாத அளவுக்கு அரசியல் பண்ணிவருகிறார்.
அதன் அடிப்படையில்தான் பழனியில் உள்ள விஸ்வநாதன் ஆதரவாளர்களர்கள் அமைச்சர் சீனிவாசன் படத்தை போடாமல் தீபாவளிக்கு வாழ்த்தி பேனர்கள் வைத்து இருக்கிறார்கள். இதை முதல்வர் எடப்பாடி வரை கொண்டு செல்ல மாவட்ட கழகம் தயார் ஆகி வருகிறது என்று கூறினார்கள்.
இதுபற்றி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்ட போது.... மாவட்டத்தில் நடக்கும் கட்சி கூட்டங்கள். கட்சியின் அலோசணை கூட்டங்களுக்கு கூட அண்ணன் விஸ்வநாதனுக்கு எந்த ஒரு தகவலும் சொல்வதில்லை அது போல் அரசு நிகழ்ச்சிகளுக்கும் தகவல் கொடுப்பதில்லை எந்த ஒரு பதவியிலும் இல்லாத மாவட்ட செயலாளர் மருதராஜ்சை அரசு நிகழச்சியில் போடுகிறார்கள் ஆனால் எங்க முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் அண்ணன் விஸ்வநாதனை கூப்பிடுவது இல்லை. கடந்த வாரம் கூட பழனி மருதாநதி அணை தண்ணீரை திறந்து வைக்க அமைச்சர் சீனிவாசன் வந்தார். அந்த விளம்பர்திலும், பேனர்களிலும் அண்ணன் விஸ்வநாதன் படம் போடாமல் புறக்கணித்து விட்டனர். அதுபோல்தான் மாவட்டத்தில் நடக்க கூடிய பல நிகழ்ச்சிகளில் சீனிவாசன் ஆதரவாளர்கள் எங்க முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் விஸ்வநாதன் படத்தையும் பெயரையும் போடுவதில்லை அதுதான் நாங்களும் சீனிவாசன் படத்தை போடவில்லை. இதுபற்றி முதல்வர் எடப்பாடியிடம் அவர்கள் புகார் கூறினால் நாங்களும் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம் என்று கூறினார்கள்.
இப்படி மாவட்டத்தில் ஆளும் கட்சியின் உள்கட்சிகுள்ளேயே முன்னாள் இன்னாள் அமைச்சர்களின் கோஷ்டி பூசல் உச்சகட்டத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளர்களாக இன்னாள் அமைச்சர் சீனிவாசனையும். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனையும் முதல்வர் எடப்பாடி நியமித்து இருக்கிறார். இப்படி உள்கட்சியில் நடக்கும் கோஷ்டி பூசல் இடைத்தேர்தலிலும் விஸ்வரூபம் எடுக்க போகிறது என்ற பேச்சு இப்பொழுதே ர.ர.க்கள் மட்டுமல்ல எதிர்கட்சிகள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.