Skip to main content

முள்ளிவாய்க்கால் முற்றம் நடராசனின் கொள்கை உணர்வுக்கு காலங் கடந்து நிற்கும் வரலாற்றுச் சின்னம் - கி.வீரமணி

Published on 20/03/2018 | Edited on 20/03/2018
natarajan

 

சசிகலாவின் கணவர் ம.நடராசன் மறைந்தார்.  அவரது மறைவு குறித்து திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள இரங்கல்:

’’அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவராக இருந்த காலந்தொட்டே, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட தோழர் ம. நடராசன் வாழ்நாள் இறுதி வரை ஒரு மொழிப் போராளியாகவும், இனப் போராளியாகவும், சீரிய சுயமரியாதைக் காரராகவும், பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தவர். திராவிட உணர்வின் மாறாத அடையாளமாகவும் திகழ்ந்தவர்.

 

அரசியலில் அவரின் நிலைப்பாட்டிற்கும் அவர் சிற்சில நேரங்களில் எடுத்த நிலைப்பாட்டிற்கும் மாறுபாடுகள் நமக்கு இருப்பினும், நட்பில் எப்போதும் நம்மிடம் மாறாத மாண்பாளர், தலை சிறந்த மனிதநேயப் பண்பாளர்; மருத்துவமனையில் நேற்று மாலை 6 மணிக்குசென்று நேரில் பார்த்தேன்.

 

சிறந்த இலக்கியவாதி, நல்ல எழுத்தாளர் பலரையும் ஆதரித்து உதவிய ஒரு கொடையாளி. ஈழத் தமிழர் பிரச்சினையில், அவர்களுக்காக முன்னின்று ஆதரவு தந்ததோடு, இனப்படுகொலையை உலகம் அறிந்து கொள்ளும் வரலாற்று சான்றாவணமாக்கிடும் தஞ்சையில் "முள்ளிவாய்க்கால் முற்றத்தை" அவர் அமைத்தது அவருடைய கொள்கை உணர்வுக்கு, காலங் கடந்து நிற்கும்  வரலாற்றுச் சின்னமாகும். அதன் மூலம் என்றென்றும் அவர் வாழ்வார் என்பது உறுதி.

 

அவருடைய இழப்பு திராவிடர் சமுதாயத்திற்கே பெரும் இழப்பு! அவரை இழந்து வாடும் அவருடைய வாழ்விணையர் திருமதி சசிகலா மற்றும் அவரது சகோதரர், சகோதரிகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலும், ஆழ்ந்த இரங்கலும் உரித்தாகுக! ’’

                      

சார்ந்த செய்திகள்

Next Story

கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் - புகைப்படங்கள் வைரல்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajith kumar in cricketer natarajan birthday party

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில்,  சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சு, பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக “யார்க்கர் கிங்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணி வெற்றி பெற அவருடைய பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனிடையே தனது சொந்த ஊரில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது பயோ-பிக் உருவாகுவதாகவும் அதில் சிவகார்த்திகேயன் நடராஜனாக நடிக்கவுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் அதுகுறித்து வெளியாகவில்லை. 

ajith kumar in cricketer natarajan birthday party

இந்த நிலையில், இன்று நடராஜன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்த விழா நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட், பேட், அக்லி படத்தில் நடிக்கவுள்ளார். 

Next Story

1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
1000 year old Mahavira sculpture discovered

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மணவராயனேந்தலில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கி.பி.11ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி பகுதியில் கள ஆய்வின் போது, மணவராயனேந்தலில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24 ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் இருப்பதை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சு. ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் மீ. சரத் ராம் ஆகியோர் கண்டுபிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, ஆய்வாளர் நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு கூறியதாவது, ‘விருதுநகர் மாவட்டத்தில் கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குறண்டி, இருஞ்சிறை, புல்லூர், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், திருச்சுழி, புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகரநல்லூர், சேத்தூர், சென்னிலைக்குடி, கீழ் இடையன்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்ட இடங்களில் சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மணவராயனேந்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகாவீரர் சிற்பம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. கருங்கல்லால் ஆன இச்சிற்பத்தில் மகரத் தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்திய விநோதம், சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. முக்குடை அழகிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். இதன் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம். திருப்புல்லாணியிலிருந்து கமுதி, திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பெருவழிப் பாதையில் அநேக இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.

சிற்பம் உள்ள இடத்தைச் சுற்றிலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இவை ஆதாரமாக உள்ளன. பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இச்சிற்பத்தை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாக’ அவர் தெரிவித்தார்.