சுற்றுசூழல் ஆர்வலரும், கூடங்குளம் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளியுமான முகிலன் கடந்த 15 ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இரவு 10 மணிக்கு வந்தவர் அதன்பிறகு காணாமல் போயுள்ளார். பல்வேறு போராட்டங்களில் முன்னணியில் நின்று நடத்தியவர் முகிலன். அரசுக்கு எதிராகவும், காவல் துறைக்கு எதிர்ப்பாகவும் கூடங்குளம் நியூட்ரினோ ஸ்டெர்லைட்ஆலைகளுக்கு எதிராகவும் காவிரி ஆற்றில் மணல் கொள்ளை நடத்தும் மணல் மாபியாக்களுக்கு எதிராகவும் போராட்ட களத்தில் இருந்தவர் முகிலன். அந்த முகிலன் நிச்சயமாக கடத்தப்பட்டிருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. இந்த நிலையில் முகிலன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு.
இதன் தொடர்ச்சியாக சென்ற 2 ஆம் தேதி தனது முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளார்கள் சிபிசிஐடி போலீசார். சென்னையில் நேற்று போலீசார் நடத்திய விசாரணையில் முகிலன் காணாமல் போனது பற்றி புகார் கொடுத்த லயோலா மணி மற்றும் எழும்பூர் ரயில் நிலைத்தில் அன்று இரவு முகிலனோடு வந்திருந்து கரூர் புறப்பட்டு சென்ற காவிரி ஆறு பாதுகாப்பு குழுவை சேர்ந்த பொன்னரசு என்பவர் மற்றும் ராஜேஷ் மேலும்முகிலனின் மனைவி பூங்கொடி ஆகியோரிடம் நேற்று ஒருநாள் முழுக்க சென்னையில் விசாரணை செய்துள்ளார்கள்.
அதேபோல் கரூரில் முகாமிட்டுள்ள சிபிசிஐடி போலீசார் காவிரி ஆறு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த கேஆர்எஸ்மணி மற்றும் மே பதினேழு இயக்க திலீபன்,முகிலனுடன் போராட்டக்களத்தில் தொடர்ந்து பயணப்பட்டு வந்த சமூக ஆர்வலர் இசை என்கிற ராஜேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை செய்துள்ளார்கள் சிபிசிஐடி போலீசார். தொடர்ந்து முகிலன் தொடர்பில் இருந்த இயக்க தோழர்கள்,அரசியல் கட்சியினர், சுற்றுசூழல் அமைப்பை சேர்ந்தவர்கள் என பலரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது சிபிசிஐடி. மேலும் முகிலன் பயன்படுத்திய செல்போன் உரையாடல்கள் வாட்ஸப் மற்றும் முகநூல் என பல்வேறு ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளார்கள் சிபிசிஐடி போலீசார்.
இறுதியாக அவரது செல்போனில் தொடர்புகொண்ட தோழர்களையும் அவர் விவரங்களையும் ஆதாரங்களாக திரட்டியுள்ளதாகவும், முகிலன் ரயில் மூலம் வெளியூர் செல்லவே இல்லை என்பதையும் போலீசார் உறுதிப்படுத்துகிறார்கள். சிபிசிஐடி விசாரணை வேகம் பெற வேகம் பெற முகிலன் விவகாரம் கடத்தப்பட்டாரா? அப்படி என்றால் யாரால் கடத்தப்பட்டார், எங்கு உள்ளார். என்கிற பல்வேறு மர்மங்கள் வெளிவர தொடங்கும்.