கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர்’ என்று கூறியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், ‘போலியான ஆவணங்களைக் கொண்டு தன்னை மிரட்டி நிலத்தைப் பதிவு செய்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பான நிலத்தின் ஆவணங்கள் காணவில்லை என்று சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், ‘நிலத்தின் ஆவணங்களைக் கண்டறிய முடியவில்லை’ எனக் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் போலியான சான்றிதழை அளித்துள்ளார். இதன் அடிப்படையிலே எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர் நிலத்தை மோசடியாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் இந்த நில மோசடி வழக்கில் உடந்தையாக இருந்ததாகக் கூறி காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் சிபிசிஐடி போலீசாரால் கடந்த 17 ஆம் தேதி (17.07.2024) கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கைது செய்யப்பட்ட அவரை கரூர் அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.