பெரியாரின் பெருந்தொண்டரும், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு போராளியுமான அய்யா வே.ஆனைமுத்து அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு மறைவெய்தினார். முதல்வர் ஸ்டாலின் உட்பட , அரசியல் தலைவர்கள், திராவிட சிந்தனையாளர்கள் என பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். அய்யாவின் அருந்தொண்டுகளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
இந்த நிலையில், திமுக ஆட்சியின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் மே மாதம் நடந்தது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரின் மறைவுக்கு அந்த கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் பட்டியலில் அய்யா வே.ஆனைமுத்துவின் பெயர் விடுபட்டிருந்தது. இந்த தவறை அறிந்த திராவிட சிந்தனையாளர்கள் பலரும் வருந்தினர். இந்த சூழலில், நாட்கள் நகர்ந்தன. ஆனைமுத்துவின் மறைவு குறித்து பலரும் மறந்து போனார்கள். இந்த நிலையில், திமுக ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டம் நடந்து வருகிறது. இதன் இரண்டாம் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட பலருக்கும் இரங்கல் வாசிக்கப்பட்ட பட்டியலில் அய்யா வே.ஆனைமுத்துவின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.
இது எப்படி என விசாரித்தபோது, "பட்ஜெட் கூட்டத் தொடருக்கான அறிவிப்பு வெளியானதும், இந்த முறை இரங்கல் தீர்மானம் வாசிப்பில் ஆனைமுத்துவின் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என விரும்பினார் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவசங்கர். கடந்த முறை ஆனைமுத்துவின் பெயர் விடுபட்டதை முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார் சிவசங்கர். உடனே, சபாநாயகர் அப்பாவுவை தொடர்பு கொண்டு பேசினார் முதல்வர். இதன் பிறகே, ஆனைமுத்துவின் பெயர் பட்டியலில் இணைக்கப்பட்டது. சரியான நேரத்தில் முதல்வரின் கவனத்துக்கு அமைச்சர் சிவசங்கர் கொண்டு செல்ல எடுத்துக்கொண்ட முயற்சி பாராட்டுதற்குரியது" என்கிறார்கள் பெரியாரிய சிந்தனையாளர்கள்.