Skip to main content

மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு தேர்வானவர்களுக்கு எதிரான வழக்கு!- அறிவிக்கப்பட்ட பட்டியலை ரத்து செய்து உத்தரவு!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

தமிழகத்தில் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு 33 விண்ணப்பதாரர்களை  மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தமிழகத்தில்,113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2018- ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளம்பரம் வெளியிட்டது. இப்பணிக்கு எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

இத்தேர்வுக்கு 2 ஆயிரத்து 176 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 785 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ளவர்களுக்கு, 2018 ஆகஸ்ட் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. விதிகளின்படி, ஒரு பதவிக்கு இரு விண்ணப்பதாரர்கள் என்ற அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்களை அழைக்காமல், 33 பேர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

motor vehicle inspector exam chennai high court order

இதை எதிர்த்து செந்தில்நாதன் உள்ளிட்ட விண்ணப்பதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், அங்கீகரிக்கப்பட்ட பணிமனையில் அனுபவச் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிகளில் திடீர் மாற்றம் கொண்டுவந்து, அந்தப் பணிமனையில் பணியாளர் வருகைப் பதிவு இல்லை, சேமநல நிதி இல்லை என்பன உள்ளிட்ட காரணங்களைக் கூறி, தங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தன.
 

இந்த வழக்குகளில் மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் யு.கருணாகரன், டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.டி.கோபலன், தேர்வாணைய வழக்கறிஞர் நிறைமதி,  போக்குவரத்துத் துறை தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், அரசு வழக்கறிஞர் போத்திராஜ் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
 

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களைப் போல, நேர்முகத்தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனச் சுட்டிக் காட்டினார். இதையடுத்து, புதிய விதிகளை வகுப்பதாகவும், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடத்தப்படும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஏற்கனவே 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிய விதிகளின்படி, எழுத்து தேர்வில் பங்கேற்ற ஆயிரத்து 328 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களைச் சரிபார்க்க வேண்டுமென, மோட்டார் வாகன பராமரிப்புத் துறைக்கு உத்தரவிட்டார். மேலும், இந்தப் பணிகளை நான்கு வாரங்களில் முடித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
 

மோட்டார் வாகன பராமரிப்புத் துறை அறிக்கையைப் பெற்ற நான்கு வாரங்களில், தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களையும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து, இறுதிப் பட்டியலைத் தயாரித்து இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என, அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தார்.
 

சார்ந்த செய்திகள்