திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 150க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது மத்திய அரசு உயர்த்தியுள்ள 58% உரம் விலையைக் கண்டித்தும், நெல்லுக்கு உரிய விலையை வழங்க வலியுறுத்தியும் கோஷமிட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது அவர்களைத் தடுத்து காவல்துறை உதவி ஆணையர் மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து முற்றுகையில் ஈடுபடவே போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகரக் காவல்துறை துணை ஆணையர் பிரவின்குமார் ரெட்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வருமாறு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் மனு அளித்தனர்.
மனு அளித்த அவர்கள், “போராடுவதற்கு டெல்லி செல்ல தங்களைக் காவல்துறையினர் அனுமதிக்க மறுக்கின்றனர். எனவே, போராட்டம் நடத்த டெல்லி செல்வதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும்” என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், “நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று உங்களுடைய போராட்டத்தை நடத்தலாம். யாரும் உங்களைத் தடுக்கப் போவதில்லை” என்று பதில் அளித்துள்ளார்.