பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ளது பரவாய் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் வேலு-மூக்காயி(70) தம்பதியினர். இவரது கணவர் வேலு பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் இவர்களது மகன் பாலமுருகன் (38 வயது) மூக்காயி உடன் வசித்துவந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு மூக்காயும் இறந்து போனார். உறவினர்கள் அவரது உடலை அந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் இறுதி சடங்குகள் செய்து புதைத்துவிட்டனர். தாய் இறந்த வேதனை தாங்க முடியாமல் அவரது மகன் பாலமுருகன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்போல தனக்குத் தானே பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
அதோடு தினமும் சுடுகாட்டிற்குச் சென்று தனது தாய் புதைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து அழுது புலம்பி கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சுடுகாட்டுக்குச் சென்ற பாலமுருகன் தனது தாய் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எலும்புக் கூடான அவரது தாயை குழியிலிருந்து வெளியே எடுத்துள்ளார். ஊராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டி அப்பகுதியில் நின்றிருந்தது அதில் அவரது தாயின் எலும்புக்கூட்டை அள்ளிப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு கொண்டு வந்து அதைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளார். தினமும் பாலமுருகனுக்கு உணவு கொடுக்கச் செல்லும் அவரது உறவினர் சுமதி என்பவர் வழக்கம்போல் அவருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பாலமுருகன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.
அவர்கள் வீட்டுக்குச் சென்று தேடிப் பார்த்தபோது எலும்புக்கூடு மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்ததோடு வீட்டில் வைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடு இறந்துபோன மூக்காயி உடையதுதானா என்பதை அறிவதற்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதை உறுதி செய்த பிறகு மீண்டும் அதே சுடுகாட்டில் மூக்காயி எலும்புக்கூட்டை கொண்டுவந்து புதைத்துள்ளனர். சுடுகாட்டில் புதைக்கப்பட்ட தனது தாயின் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்து வந்த மகனின் செயல் பெரம்பலூர் மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.