விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அருகில் உள்ளது கீழ்வாலை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (30). இவருக்கும் ஓசூரை சேர்ந்த புஷ்பா (27) ஆகிய இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகள், நான்கு வயதில் மணிகண்டன் எனும் மகன் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். கன்னியப்பன் சென்னையில் கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தற்போது கீழ்வாலையில் உள்ள தங்கள் கூரை வீட்டை மாடி வீடாக கட்டி வருகின்றனர். இதற்காக கன்னியப்பன் சென்னையிலிருந்து கீழ்வாலை கிராமத்திற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
அதன்படி கீழ்வாலை கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார். அப்போது கன்னியப்பன் மது போதையுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது நிலையை பார்த்த மனைவி புஷ்பா கணவரை திட்டியுள்ளார். ’இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் முன்னேறி ஒரு வீடு கட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளோம். இப்படிப்பட்ட நிலையில் குடிபோதைக்கு அடிமையானால் எப்படி வீட்டை கட்டி முடிக்க முடியும்’ என்று புஷ்பா கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த புஷ்பா, இரவு ஒன்பது மணிக்கு மேல் கணவர் மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுடன் இரு குழந்தைகளுடன் வீட்டுக்கு அருகில் இருந்த விவசாய கிணற்றுக்கு சென்றுள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் புஷ்பாவை தடுத்து சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். குடும்பத்தினர் அனைவரும் தூங்கிய பிறகு கோபம் தணியாத புஷ்பா தூங்கிக்கொண்டிருந்த தனது 4 வயது மகன் மணிகண்டனை மட்டும் தூக்கிக்கொண்டு நள்ளிரவு நேரத்தில் சத்தமில்லாமல் ஊருக்கு அருகிலுள்ள குளிர் சுனை என்ற இடத்தில் உள்ள ஏழுமலை என்பவரின் விவசாய கிணற்றுக்கு சென்று தன் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரவு இரண்டு மணிக்கு மேல் போதை தெளிந்து எழுந்து பார்த்த கன்னியப்பன் தன் மனைவியும் குழந்தையும் காணாமல் தேடியிருக்கிறார். அதோடு உறவினர்களை எழுப்பி விஷயத்தைச் சொல்ல அவரது உறவினர்களும் ஊர் மக்களும் திரண்டு சென்று புஷ்பாவையும் குழந்தையும் தேடினார்கள். அப்படி தேடி செல்லும் போது விவசாயி ஏழுமலையின் கிணற்றின் அருகில் புஷ்பா பயன்படுத்திய செல்போன் கிடந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த ஊர்மக்கள் வேட்டவலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினார்கள். கிணற்றிலிருந்து புஷ்பாவையும் அவரது நான்கு வயது மகன் மணிகண்டன் ஆகிய இருவரையும் சடலமாக மீட்டனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் குமார் கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் தன் மகனோடு தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயும் அவரது மகனும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கீழ்வாலை கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.