கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கெந்தப் பொடிக்கார தெருவைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் (35) - நிசாந்தி (30) தம்பதி. இத்தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் இருந்தனர். இதில், அவர்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். சிகிச்சையில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக பெற்றோர்கள் மனமுடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை நிஷாந்தியின் கணவர் வெங்கடேசன் அவரது சகோதரர் குமார் ஆகிய இருவரும் ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்குச் செல்வதற்கு தயாரானார்கள். அப்போது நிஷாந்தனி, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், தானும் குழந்தைகளும் கோவிலுக்கு வரவில்லை என்று தெரிவித்து வீட்டிலேயே இருந்துள்ளார். அவர்கள் கோவிலுக்கு கிளம்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், மாலை வரை வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நிஷாந்தனி வீட்டுக் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர். அப்போது திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது, நிஷாந்தனி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதனைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக வெங்கடேஷ் மற்றும் குமார் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். தகவல் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு அவர்கள் வந்தனர்.
இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த நிஷாந்தி மற்றும் அவரது குழந்தைகள் ஆகிய மூன்று பேரின் உடல்களையும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.