சேலம் கந்தம்பட்டி மூலப்பிள்ளையார் கோயில் பகுதியில் சந்துக்கடையில் டாஸ்மாக் மதுபானங்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். அங்கு ஒரு வீட்டில் பெண் உள்பட இருவர் திருட்டுத்தனமாக டாஸ்மாக் மதுபானங்களை விற்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் தனம் (44) மற்றும் கவுதம் (27) என்பதும், இருவரும் தாய், மகன் என்பதும் என்பதும் தெரியவந்தது.
டாஸ்மாக் கடைகளிலிருந்து மொத்தமாக மதுபானங்களைக் கொள்முதல் செய்து, அதை வீட்டில் வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்; 24 மணி நேரமும் மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 51 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.