நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் முருங்கைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தேவிகா. விசைத்தறி தொழிலாளி. இவருடைய மகள் வைஷாலி (15) (தாய் மற்றும் மகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). கருத்து வேறுபாடு காரணமாக, தேவிகா கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பிரகாஷ் (40) என்பவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.
சிறுமி வைஷாலி உள்ளூரில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்தாள். சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் இருந்த தேவிகா, அதற்கு மேல் மகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்தார். இது ஒருபுறம் இருக்க, தேவிகா வேலைக்குச் சென்றபோது சிறுமி மட்டும் தனியாக வீட்டிலிருந்த நேரங்களில் அவளை பிரகாஷ் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
சிறுமி ஒத்துழைக்க மறுத்த போதெல்லாம் அவளை நெருப்பால் சூடு வைத்தும், அடித்து உதைத்தும் கொடுமைப்படுத்தி இருக்கிறார். தாயின் ஆண் நண்பரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தன் தாயிடம் சொல்லி அழுது புலம்பி இருக்கிறாள் வைஷாலி. அதற்கு அவரோ, பெற்ற மகள் என்றும் பாராமல், பிரகாஷ் ஆசைப்படுவதுபோல் நடந்து கொள் என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி, மீண்டும் முரண்டு பிடித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தாயாரும், அவருடைய ஆண் நண்பரும் சிறுமியை மீண்டும் அடித்து கொடுமைப் படுத்தியதோடு, அவளுக்கு சில நாள்கள் உணவு கொடுக்காமல் பட்டினியும் போட்டுள்ளனர். காவல்துறை விசாரணையிலும் இந்த விவரங்கள் ஊர்ஜிதம் செய்யப்பட்டன. இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், பெற்ற தாயே உடந்தையாக இருந்ததாகவும் பிரகாஷ் மற்றும் தேவிகா ஆகிய இருவரையும் திருச்செங்கோடு மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சுமதி வழக்குப்பதிவு செய்து, கைது செய்தார்.
இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில், பிரகாஷை சேலம் மத்தியச் சிறையிலும், சிறுமியின் தாயாரைச் சேலம் பெண்கள் கிளிச்சிறையிலும் அடைத்தனர்.