புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களில் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. அருகாமை காவல் நிலையங்களில் புகார் கொடுத்துவிட்டு தங்கள் பைக் கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர் பலர்.
இந்தநிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை நகரில் ஒரு டிவிஎஸ் எக்ஸ்.எல் வாகனத்தை திருடும் போது அப்பகுதியில் நின்றவர்கள் திருடனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பல வருடமாக பல நூறு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட புகார்கள் நிலுவையில் உள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தான் அமைத்துள்ள சிறப்பு பிரிவு போலீசார் மூலம் மோட்டார் சைக்கிள் திருடனிடம் விசாரிக்க உத்தரவிட்ட நிலையில் பலமான கவனிப்புகளுக்கு பிறகு வாய் திறந்த திருடன்.
என் பெயர் கண்ணன், ஊர் கொத்தமங்கலம் கிழக்கு பல வருடமாக வெளியூர்களில் திருமண மண்டபம், கடைவீதி, ஆள் இல்லாத வீடுகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி எங்க ஊர்ல உள்ள வெளிநாடு போயிட்டு வந்து மெக்கானிக் கடை வைத்திருப்பரிடம் கொடுப்பேன். உடனே நம்பர் பிளேட்களை கழட்டிட்டு அந்த மெக்கானிக், மோட்டார் சைக்கிள்களை உள்ளூர் ஆட்களிடம் வண்டி புக் பைனான்ஸில் உள்ளது. அவசரமா பணம் தேவைப்படுது'னு பார்டி சொல்றாங்க அதனால ரூ.5 ஆயிரம், 10 ஆயிரம் கொடுங்க புக் கொடுத்துட்டு மீதிய வாங்கிக்கிறோம்'னு வண்டிகளை வித்துடுவார்.
பெரும்பாலும் பழைய வண்டிகளைத் தான் திருடுவோம். அப்பதான் ஆன்லைன் பதிவுல காட்டாது என்று சொல்லிக் கொண்டே போக.. சரி திருடின வண்டிகள் எல்லாம் எங்கே இருக்கு என்று கேட்க, எங்க ஊர்லயே 20 வண்டிக்கு மேல ஓட்டிக்கும் இருக்காங்க என்று சொல்ல, நேற்று முன்தினம் இரவில் கண்ணனுடன் வந்த சிறப்பு பிரிவு போலீசார் சம்மந்தப்பட்ட மெக்கானிக்கையும் தூக்கி வைத்துக் கொண்டு பைக் விற்ற இடங்களை காட்டச் சொல்லி, எல்லா பைக்குகளையும் தூக்கி 2 டாடா ஏசிகளில் ஏற்றியுள்ளனர். அதிலும் 2 பேர் கீரமங்கலம் காவல் நிலையத்தில் வாகனங்களை ஒப்படைத்துள்ளனர். இப்படி சில நாட்களில் 31 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முதல்கட்டமாக கொத்தமங்கலம் கண்ணனை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சிலரை போலீசார் கண்காணித்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்கள் மூலம் மேலும் பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்கின்றனர்.
மேலும் இதே பகுதியில் கஞ்சா கடத்தும் ஒரு இளைஞர்கள் கும்பல் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி போன்ற வெளிமாவட்டங்களில் திருடிக் கொண்டு வரும் விலை அதிகமுள்ள மோட்டார் சைக்கிள்களை 2,3 முறை கடத்தலுக்கு பயன்படுத்திவிட்டு அதன் பிறகு பழைய இரும்பு கடைகளிலும், தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் குறைந்த விலைக்கு விற்பனை செய்த ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் உள்ளதாகவும் கூறுகின்றனர்.