திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம், திட்டச் செயல்பாடுகள் குறித்தும் உரிய செலவினங்கள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான குழு கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் செயல்பாடு மற்றும் பணி முன்னேற்றம் குறித்து குழு தலைவர் எம்.பி அண்ணாதுரை தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் எம்.பி, எம்.எல்.ஏக்கள், ஒன்றிய குழு தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்), பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உறுப்பினரின் மாதிரி கிராமத் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் போன்ற பல திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெறும் பணிகளில் பிரதமர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம், தாட்கோ, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் போன்றவற்றில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக மக்கள் பிரதிநிதிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். அந்த துறைகள் குறித்த கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறினர். இந்த துறைகளில் முறைகேடுகள் அதிகமாக நடைபெறுகின்றன என ஆய்வுக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
இந்த கூட்டத்தில், ரயில்வே, திட்டச் செயலாக்கம் உட்பட சில துறைகளில் இருந்து அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. கூட்டம் நிறைவுற்றபின் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குழு தலைவர் அண்ணாதுரை எம்.பி, "ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தாட்கோ, வேளாண்மை பொறியில் துறை போன்றவற்றில் அதிகளவு ஊழல்கள், முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து எங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளோம். கடந்த முறை தவறுகளைச் சுட்டிக்காட்டியும் அதனை அவர்கள் திருத்திக்கொள்ளவில்லை. அடுத்த கூட்டத்துக்குள் இந்தப் புகார்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாங்கள் இதுகுறித்து மத்திய அரசிடம் முறையிடுவோம்" என்றார்.