கோடைகாலம் ஆரம்பித்து வெயில் சுட்டெரிக்கிறது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள் என வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ளது. இந்த வெயிலுக்காக பலரும் இலவச மோர் பந்தல், தண்ணீர் பந்தல் என வைத்து பயணிகளின் தாகத்தை தீர்ப்பது ஒருபுறம்மென்றால், ஒரு டம்ளர் தண்ணீரையும் காசாக்க வேண்டும் என்பவர்களும் மற்றொருபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனை காண்பவர்கள் சக மனிதனின் தாகத்தை தணிக்க ஒரு வாய் தண்ணீர் தராத அளவுக்கு மனிதநோயம் மாண்டுவிட்டதே என்ற புலம்பல்கள் பல கேட்கத்தான் செய்கின்றன.
அதேநேரத்தில் மனித நேயமற்றவர்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்கிற பொதுவான பிம்பம் மக்களிடம் உள்ளது. பெரும்பாலான நேரங்களில் அப்படி காவல்துறையில் பணியாற்றுபவர்கள் இருந்தாலும், அங்கும் மனித நேயம்மிக்க மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பவர்களும் உண்டு. மனிதர்களிடம் மட்டும்மில்லை, விலங்குகளுக்கே தண்ணீர் தந்து பெரும் பாராட்டை பெற்று வருகிறார்கள் ஒரு காவல்நிலையத்தில்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் களம்பூர் என்கிற சிறு பேரூராட்சி உள்ளது. தென்னிந்தியாவில் அரிசிக்கு பெயர் பெற்ற ஊர் இது. இந்த ஊரில் உள்ள காவல்நிலையத்தை சுற்றி மரங்கள் பலவுள்ளன. இந்த மரங்களில் குரங்குகள் பல தினமும் வந்து ஜாலியாக விளையாடிக்கொண்டும் ஓய்வு எடுத்துக்கொண்டும் இருக்கும். தண்ணீர் தாகம் எடுத்தால் பக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் தொட்டியில் தண்ணீர் அருந்திவிட்டு வரும்.
தற்போது கோடைக்காலம் நடப்பதால் தண்ணீரில்லாமல் விவசாய நிலங்களும் காய்ந்துப்போய்வுள்ளன. இதனால் குரங்குகள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றன. இதனைப்பார்த்த களம்பூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து தினமும் குரங்குகள் குடிக்க இரண்டு முறை பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீர் நிரப்பிவைக்கின்றனர். தாகம் எடுக்கும்போது குரங்கள் வந்து குடித்து விட்டு செல்கின்றன.
காவல்நிலையத்துக்கு பிரச்சனையென வந்து காத்திருக்கும் பொதுமக்கள், இதனைப்பார்த்துவிட்டு இதுப்பற்றிய தகவலை வெளியே சொல்லினர். ஆச்சர்யமான பொதுமக்கள், அப்பகுதி சமூக ஆர்வலர்கள். களம்பூர் காவல்நிலைய காவலர்களை வெகுவாக பாராட்டிவருகின்றனர்.
காவல்நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் டீ வாங்கி வா, ஜீஸ் வாங்கி வா, ஜெராக்ஸ் எடுத்து வா, பிரியாணி வாங்கி வா என அலையவிடும் காவல் அதிகாரிகளுக்கு மத்தியில் குரங்குகளுக்கு தண்ணீர் தரும் காவலர்கள் பாராட்டுக்குரியவர்களே.