Skip to main content

குரங்கணி தீ விபத்து- நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: திருமாவளவன்

Published on 13/03/2018 | Edited on 13/03/2018
thiru

 

குரங்கணி தீ விபத்து குறித்து நீதிவிசாரணைக்கு ஆணையிடு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்த அவரது அறிக்கை:

’’குரங்கணி மலைப் பகுதிகளில் நடந்த கொடூரம் நெஞ்சைப் பதற வைக்கிறது. சென்னையிலிருந்தும் வேறு சில பகுதிகளிலிருந்தும் மலையேற்றத்திற்காக சென்றவர்களில் பத்துபேர் அங்கே சுற்றிச் சுழன்ற காட்டுத்தீயில் சிக்கி பலியாகியுள்ளனர். ஏராளமானவர்கள் படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே காயங்களின்றி தப்பித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் சிலர் புதிய தம்பதிகள் என்றும் தெரியவருகிறது.

 

அரசு அதிகாரிகளின் கவனக்குறைவால் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஓரிருவாரங்களாகவே குரங்கணி பகுதியில் காட்டுத் தீ பரவி வருகிறது என்பதை அரசு அதிகாரிகள் அறியாமலா இருந்திருப்பார்கள்? இந்நிலையில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகளின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பின்னணியை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.  மேலும், இதுகுறித்து நீதி விசாரணைக்கும் ஆணையிட வேண்டும்.

 

குரங்கணி பகுதியில் அடிக்கடிக் காட்டுத் தீ பிடிக்கும் என்பது அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தும் அதனைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது. ஆகவே, இதுகுறித்து தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். உயரிழந்த, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.’
 

சார்ந்த செய்திகள்