திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான ராமஜெயம், கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியன்று நடைப்பயிற்சி சென்ற போது மர்மமான முறையில் கடத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி கல்லணை பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தமிழ்நாடு போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதில் வழக்கு சம்பந்தமாக எந்த துப்பும் கிடைக்காத காரணத்தினால் வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், சி.பி.ஐ விசாரணையிலும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக, சிறையில் உள்ள முக்கியக் கைதிகள், குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறைக்கு வெளியில் உள்ளவர்கள் என அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்திலிருந்து அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்போனில் பேசியவர்கள் என 1400க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு, பிரபல ரவுடிகளான நரைமுடி கணேசன், மோகன்ராம் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. இவர்களிடம் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி ஷகீல் அக்தர், ராமஜெயம் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.
அந்தப் பட்டியலில் இருக்கும் 12 பிரபல ரவுடிகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனை செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அந்த 12 பேரும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு “உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்ற அனுமதியைப் பெற வேண்டும் என்றால், மாவட்ட எஸ்.பி.யால் தான் அனுமதி கோர முடியும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் டி.எஸ்.பி. தான் மனு தாக்கல் செய்துள்ளார். இது உயர்நீதிமன்ற வழிக்காட்டலுக்கு எதிரானது. எனவே, இது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் எஸ்.பி. மீண்டும் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்து இந்த வழக்கை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதன் பிறகு, ரவுடி மோகன் ராம் வழக்கறிஞர் அலெக்ஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ராமஜெயத்திற்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனக் கூறியுள்ளனர். ஆனால், அவருக்கு மது அருந்தும் பழக்கமுள்ளது என சி.பி.ஐ. விசாரணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, ராமஜெயம் கொலை வழக்கில் அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த வேண்டும். அரசியல் காரணங்களுக்காகவே இந்த 12 பேரை மட்டும் அழைத்துள்ளனர்” என்று தெரிவித்தார். 10 வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் ராமஜெயம் கொலை வழக்கு தற்போது இறுதி முடிவை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.