கோப்புப்படம்
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக- பாஜக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிலையில், அடுத்தபடியாக நாளை மதுரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள மீண்டும் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். மோடி வருகை காரணமாக சமூக ஆர்வலரான நந்தினி மற்றும் அவரது கணவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சமூக ஆர்வலரான நந்தினி 'டாஸ்மாக்', 'நீட்' தேர்வு ஆகியவற்றை எதிர்த்தும் மத்திய அரசையும், மோடியையும் எதிர்த்து போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.