டெல்லியில் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட 'சென்ட்ரல் விஸ்டா' அவென்யூவை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கப்போகிறார்.
கடந்த 20 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடிந்த நிலையில் 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் ஒரு பகுதி இன்று திறந்து வைக்கப்பட இருக்கிறது. விஜய்சௌவுக்கில் இருந்து இந்தியா கேட் வரையிலான பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்ட அவன்யூவை பிரதமர் இன்று பார்வையிட்டு திறந்து வைக்கிறார். சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் மாநில வாரியான உணவகங்கள் மற்றும் தோட்டங்கள், பார்க்கிங் வசதிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. புதிதாக நிறுவப்பட்ட அந்த வசதிகளை கண்காணிக்க 300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் பயன்பாட்டிற்காக 64 கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதைக்கு 15.5 கி.மீ பரப்பளவில் பஜ்ரி மணலுக்கு பதிலாக புதிய சிவப்பு கிரானைட் நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,125 வாகனங்கள் நிறுத்தும் வசதி, இந்தியா கேட் அருகே 35 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 74 புராதான மாடல் விளக்குகளுடன் புதிதாக 900 மின்விளக்கு கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. புதுடில்லி முனிசிபல் கவுன்சில் ஒப்புதல் தந்ததைத் தொடர்ந்து ராஜ பாதையின் பெயர் கடமை பாதை எனவும் மாற்றப்பட்டுள்ளது. 'சென்ட்ரல் விஸ்டா' அவென்யூவை பிரதமர் மோடி திறந்து வைத்த பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.