தமிழக வேலைவாய்ப்புகளில் வடமாநிலத்தவரை திணிக்கக் கூடாது, தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 11 ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள முற்றுகை போராட்டம் குறித்த விளக்க பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், "தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவன அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வட மாநிலத்தோருக்கே வேலை வழங்கப்படுகிறது. பிற மாநிலங்களில் அம்மாநிலத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்க சட்டம் உள்ளது போல், தமிழகத்திலும் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு தமிழர்களுக்கே வேலை வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு துறையில் நூறு விழுக்காடு தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்பவற்றுக்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களுக்கான பணி தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமே நடத்த வேண்டும், இந்திய அரசு தேர்வாணையம் நடத்தக்கூடாது. இந்திய அரசு தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதால், அஞ்சல் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்கள் இடம்பெறுவதில்லை. திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்ட காலகட்டத்தில், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மூலம் ஆட்கள் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது கோச்சிங் சென்டர் மூலமாகவும், ஆள்மாறாட்டம் செய்தும் வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்திய முழுவதும் பொதுத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள், வடமாநில நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. மிகக் குறைந்த அளவே தமிழர்கள் நிறுவனங்கள் வைத்துள்ளதால் தொழில் முனையும் தமிழர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். பிற நாடுகளில் உள்ளது போல், வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டால், அந்நிறுவனத்தில் தமிழர்கள் 50 சதவீதம் மூலதனமாக சேர்க்கப்பட்டால் மட்டுமே உரிமை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
வட கிழக்கு மாகாணங்களான, நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் இருப்பதுபோல் வெளி மாநிலத்தவர்கள் உள் நுழைவுக்கான அனுமதி வழங்கும் அதிகாரத்தைத் தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு அனுமதி வழங்கும் அதிகாரத்தை கேட்டுப்பெற வேண்டும். தமிழ்நாடு அரசு பணி தருவோர் - பணி பெறுவோர் வாரியம் அமைத்து தமிழ்நாட்டில், தொழில் முனைவோருக்கு தொழிலாளர்கள் கிடைக்கும் வகையிலும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் சட்டப்படியான முகவாண்மையை உருவாக்க வேண்டும்.
திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 75 சதவீத விழுக்காடு தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியதை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் உள்ள சிறு, குறு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்காமல், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வட மாநில நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மேலும் தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் அதிகளவில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதை தடுக்கும் வகையில் தமிழக அரசு உள்நாட்டு நுழைவு அனுமதி (inner line permit) அதிகாரத்தைக் கொண்டு வர வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வட மாநில உயர் அதிகாரிகள் இருப்பதால், மொழி தெரியாமல் நிர்வாக கோளாறுகள் ஏற்படுகிறது. எனவே பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்ற பிரிவே இருக்கக் கூடாது. தமிழ்நாடு பொதுத் தேர்வு வாரியம் அமைத்து டி.ஏ.எஸ், டி.பி.எஸ் போன்ற உயர் அதிகாரிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அஞ்சல் துறை மேற்கு மண்டல தலைமையகத்தினை தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் மாபெரும் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது" என்றார்.
முன்னதாக திருவள்ளுவர் கலைக்குழுவின் தப்பாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசிய பேரியக்க மாநில துணைத் தலைவர் க.முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வேல்சாமி, மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் மு.செந்தமிழ்ச்செல்வி, மகளிர் ஆயம் பொருளாளர் ம.கனிமொழி, அமைப்புக்குழு உறுப்பினர் மு.வித்யா, தெய்வத் தமிழ்ப்பேரவை கடலூர் மாவட்ட பொறுப்பாளர் சுப்ரமணியசிவா, பொதுக்குழு உறுப்பினர்கள் சிதம்பரம் ஆ.குபேரன், பி.வேல்முருகன், த.சக்திவேல், மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் வே.தமிழ்மொழி, திருவள்ளுவர் தமிழர் மன்ற செயலாளர் தி.ஞானப்பிரகாசம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.