தமிழக அரசியல் தலைவர்களுக்கு படிப்பறிவு இல்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தது கண்டனத்திற்குரியது என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இன்று நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அப்பாவு பேசுகையில், ''இந்த ஆட்சியில் இருப்பவர்களுக்கோ, தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கோ, இங்குள்ள அரசியல்வாதிகளுக்கோ படிப்பறிவு இல்லை என நட்டா சொன்னது எவ்வளவு வன்மையான வார்த்தை. இப்படி பேசுவதை எப்படி கண்டுகொள்ளாமல் இருப்பது. இந்தியாவில் 24 சதவிகிதம் பட்டப்படிப்பு என்றால் தமிழ்நாட்டில் 51 சதவிகிதம் இருக்கிறது. மோடி எவ்வளவு படித்திருக்கிறார், அமித்ஷா எவ்வளவு படித்திருக்கிறார் என்று அவர்களிடம் கேளுங்க. எந்த பத்திரிகையாவது அவர்களிடம் அப்படி கேட்டுள்ளீர்களா? நான் இதில் அரசியல் பேசவில்லை. ஆனால் ஒரு அரசில் உள்ளவர்களுக்கு படிப்பறிவு இல்லை என்கிற அந்த வார்த்தை சரியானதா என்று சொல்லுங்கள்'' என்றார்.