மாநிலங்களை முடக்கிவிடவே திட்டமிடும் மோடி அரசு! வேல்முருகன் கண்டனம்!
கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க நடுவண் அமைப்பு ஒன்றை நிறுவ மோடி அரசு எடுத்திருக்கும் முடிவு மாநில உரிமையைப் பறிப்பது மட்டுமின்றி கூட்டாட்சி முறைக்கே எதிரானது; சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டு முறைக்கும் விரோதமானது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நம் நாடு ஒரு ஜனநாயக நாடு.
இதைப் புரிந்துகொள்வது எப்படி?
நமது அரசமைப்புச் சட்டமே அதை நமக்குப் புரியவைக்கிறது.
அதாவது தேர்தல் முறையிலான மக்கள் பிரதிநிதிகளின் அரசாங்கம் என்பதுதான் அந்தப் புரிதல்.
இந்த மக்கள் பிரதிநிதிகளின் அரசாங்கம் என்பது ஆளுங்கட்சிப் பிரதிநிதிகளை மட்டுமே உள்ளடக்கியதா?
அல்ல; நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகளையுமே உள்ளடக்கியதுதான் இந்த அரசாங்கம்.
அப்படியென்றால்?
அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தையுமே அனைத்துப் பிரதிநிதிகளோடும் கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என்பதுதான் இதற்கு அர்த்தம்.
இந்த நடைமுறை மோடி ஆட்சியில் பின்பற்றப்படுகிறதா?
இல்லவே இல்லை.
உள்நாட்டில் மட்டுமல்ல; வெளிநாடுகளுக்குச் சென்று “பல்க்”காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கிறாரே மோடி, அவையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதில்லை.
பெரும்பாலும் அமைச்சரவை முடிவுகளாகவும் அவசரச் சட்டங்களாகவுமே மோடி அரசின் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. உச்ச நீதிமன்ற வாயிலாகவும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
இந்த உத்தரவுகள் பிறகாவது நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு ஒப்புதலைப் பெறுகின்றனவா என்றால் அதுவும் நடப்பதில்லை.
ஆக அரசமைப்புச் சட்டம் திட்டவட்டமாகக் கூறும் ஜனநாயக நடைமுறைக்குப் புறம்பாகவே மோடி அரசு செயல்படுகிறது.
அதாவது சர்வாதிகார முறையில் நடக்கிறது.
மோடி பிரதமர் ஆனதே அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதல் மற்றும் மரபுப்படியல்ல.
மக்கள் தேர்ந்தெடுத்த எம்பிக்கள்தான் பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டம். ஆனால் அதற்கு மாறாக மோடி பிரதமர் வேட்பாளராகவே களமிறங்கினார்.
அதிகாரத்திற்கான ஒற்றை நபராக களமிறங்கினார்.
ஒற்றை நபர் அதிகாரம் என்பது சர்வாதிகாரமன்றி வேறென்ன?
அதனால்தான் எல்லா அதிகாரங்களையும் தன்னகத்தே குவிக்க கங்கணங்கட்டிக் கொண்டு நிற்கிறார்.
அதற்காகத்தான் மாநில உரிமைகளை வரிசையாகப் பறித்துக் கொண்டிருக்கிறார்.
மின்சாரம், கல்வி, வரி, உணவு, மானியங்கள் ரத்து என அந்தப் பட்டியல் நீள்கிறது.
இப்படி வாழ்வியல் சார்ந்த அனைத்தையும் பறித்துக் கொண்ட மோடி இப்போது கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் உரிமையையும் மாநிலங்களிடமிருந்து பறிக்க இருக்கிறார்.
இந்த காரியத்தை உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து செய்வதைப் போல் காட்டுகிறார். அந்த விதத்தில்தான் ஊடகத்தில் இந்த அறிவிப்பை வரச் செய்திருக்கிறார். இதற்கான பரிந்துரையை தனது அரசுதான் உச்ச நீதிமன்றத்திற்கு அளித்தது என்பதை மறைக்கப் பார்க்கிறார்.
அதன்படி, கீழமை நீதிமன்ற நீதிபதிகளை ஒரு “நடுவண் அமைப்பின்“ மூலம் தேர்வு செய்யும் திட்ட அறிக்கையை மாநில அரசுகளுக்கும் அங்குள்ள உயர் நீதிமன்றங்களுக்கும் அனுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
தற்போது மாநிலங்களே தங்கள் தேர்வாணயத்தின் வாயிலாக கீழமை நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்கின்றன.
இதற்கு வேட்டு வைக்கவே திரியைப் பற்றவைத்திருக்கிறார் மோடி.
தமிழக அரசு இதை உணர வேண்டும். விழித்துக் கொள்ள வேண்டும்.
மோடி, தான் மக்களாட்சி கால மனிதரல்ல என்பதை அவரே சொல்லிவிடும்போது நாம்தான் பார்த்து நடந்துகொள்ள வேண்டும். இந்த எச்சரிக்கையைத்தான் தமிழக அரசுக்கு செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க நடுவண் அமைப்பு ஒன்றை நிறுவ மோடி அரசு எடுத்திருக்கும் முடிவு மாநில உரிமையைப் பறிப்பது மட்டுமின்றி கூட்டாட்சி முறைக்கே எதிரானது; சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டு முறைக்கும் விரோதமானது. இதை தமிழினம் அனுமதிக்காது.
இது மாநிலங்களை முற்றாகவே முடக்கிவிட மோடி அரசு செய்யும் திட்டமிட்ட சதி என குற்றம்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
எனவே இதை உடனடியாகக் கைவிடக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.