மொபைல் ஆன்லைன் விளையாட்டுகளுக்குக் குழந்தைகள் அடிமையாகாமல் இருக்கப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கடந்த 25 ஆம் தேதி அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இந்தநிலையில் ஆன்லைன் கேம் விளையாடியதைத் தாய் கண்டித்ததற்காக மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக மொபைல் ஆன்லைன் விளையாட்டுகளில் சிறார்கள் மூழ்கி, அதனால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்கள் என்பது அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை தடுப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியுள்ள நிலையில், அதனை மேற்கோள்காட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கடந்த 25 ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டது.
அதில் ஆன்லைன் விளையாட்டுகளுக்குக் குழந்தைகள் அடிமையாகாமல் இருக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் செய்ய வேண்டிய வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் அசாதாரணமாக நடந்துகொள்கிறார்களா? பெரும்பாலும் இணையத்தை அதிகம் பயன்படுத்துகிறார்களா? என்பதைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனிக்க வேண்டும். வீட்டில் பொது இடத்தில் கணினி மற்றும் மொபைல் ஃபோன்களை சிறுவர்கள் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும், கணினி மற்றும் செல்ஃபோனில் விளையாட்டு செயலிகளைப் பதிவிறக்கம் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். கண்டிப்பாக இவற்றைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஆன்லைனில் விளையாடும் குழந்தைகளின் போக்கும் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் விளையாட்டுக்கு குழந்தைகள் அடிமையானால் கல்வி மற்றும் சமூக வழக்கை மோசமாகப் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தது.
இந்தநிலையில், நெல்லை மாவட்டம் திசையன்விளையில் ஃபோனில் ஃபிரீ ஃபயர் கேம் விளையாடக்கூடாது என தாய் திட்டியதின் காரணமாக பாலிடெக்னிக் மாணவர் சஞ்சய் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.