கடனை வசூலிக்க மூன்றாம் தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகளைத் தடை செய்யக் கோரி மதுரை மாவட்டம் அண்ணா நகரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி இருவரும் அடங்கிய அமர்வு முன் இன்று (06/01/2021) விசாரணைக்கு வந்தபோது, 'கடனை வசூலிப்பதற்காக மூன்றாம் தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதை ஏற்க முடியாது. கடன் செயலிகள், கடனை வசூலிக்க அங்கீகரிக்க முடியாத முறையைப் பின்பற்றுகின்றனர். கடனை வசூலிக்கும் முறைகள் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதில்லை. செயலிகள் மூலம் கடன்பெற்று தற்கொலை செய்வது இந்தியாவின் முக்கியப் பிரச்சனையாக உள்ளது' என்று தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர், கூகுள் நிறுவனம் மற்றும் மத்திய நிதித்துறைச் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.