மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கடந்த மூன்று தினங்களாக சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் வழியாக வங்கக்கடலில் கலந்து வருகிறது. சுமார் 2.10 லட்சம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றில் செல்வதால் ஆற்றின் இரு கரையோர பகுதியையும் தண்ணீர் தொட்டுச் செல்கிறது. கரையோர கிராமங்களான நாதல்படுகை கிராமத்தில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால், அப்பகுதியில் உள்ள மக்களை நாதல்படுகைக்கு அருகே உள்ள அனுமந்தபுரம் அரசுப் பள்ளி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு வேண்டிய உணவு அங்கேயே சமைத்துப் பரிமாறப்படுகிறது. இன்று மூன்றாவது நாளாக வெள்ளப் பாதிப்புகளைப் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகனும், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வமும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும், மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொடுத்தனர். முகாமில் தங்கியிருக்கும் மக்களுக்கு சமைத்து வரும் உணவின் தரம், சுவை ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஒரே தட்டில் ஒன்றாக உணவினை சாப்பிட்டு உணவின் தரத்தைச் சோதனை செய்தனர். இதனை அங்கிருந்த பொதுமக்கள் கண்டு நெகிழ்ந்தனர்.
"திமுக மாவட்டச் செயலாளரும் பூம்புகார் எம்.எல்.ஏவுமான நிவேதா முருகனுக்கும், சீர்காழி திமுக எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்துக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது எனப் பரவலாக இருந்த பேச்சுக்கு, அப்படி இல்லை என்பதற்கு ஒரே தட்டில் உணவு உண்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்" என்கிறார்கள் திமுகவினரே.