தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த நான்கு தினங்களாகத் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த மழை பாதிப்பு தீவிரமாக இருந்துவருகிறது. குறிப்பாகச் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வரும் 11ஆம் தேதி வட தமிழ்நாட்டு கடற்கரையை நெருங்கும்,. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களிலும் மக்கள் பெரிதும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட கொட்டப்பட்டு, புதுக்கோட்டை மெயின் ரோடு, ஜீவா தெரு, இந்திரா நகர், ஜே.கே. நகர், அமராவதி தெரு, சிந்து தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை அறிந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது நிர்வாக பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர் தயாநிதி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம், உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் தலை விரிச்சான், கலைஞர் நகர் பகுதி பொறுப்பாளர் மணிவேல், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.