கம்பம் நகரில் உள்ள இ.பி.ஆபீஸ் தெருவில் வசித்துவரும் இரமேஷ் - விக்னேஷ்வரி தம்பதிக்கு முதல் பிரசவத்திலேயே 3 குழந்தைகள் பிறந்துள்ளன.
தேனியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று குழந்தைகளை விக்னேஸ்வரி பெற்றெடுத்தார். இதில் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்தக் குழந்தைகளுக்கு லாவண்யாஸ்ரீ, லட்கனா ஸ்ரீ, லாபனேசன் என்று பெயரிட்டு வளர்த்துவருகிறார்கள். இதில் இரண்டு பெண் குழந்தைகளும் மூன்றாவதாக ஆண் குழந்தையையும் பெற்றெடுத்த காரணத்தால், முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகளுக்கான தலா 25,000 ரூபாய் வைப்பு நிதியைப் பெற முடியவில்லை. மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்த காரணத்தால் அரசின் வைப்பு நிதி கிடைப்பதற்கு சட்டத்தில் வழி இல்லை. அதனால் தனது குடும்ப கஷ்டத்தை தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான கம்பம் ராமகிருஷ்ணனிடம் இரமேஷ் தம்பதியினர் முறையிட்டனர். அதைக் கேட்ட எம்.எல்.ஏ. மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மூன்று குழந்தைகளுக்கும் வைப்பு நிதியை செலுத்தியிருக்கிறார். அந்தப் பணம் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் குழந்தைகளுக்குக் கிடைத்திட வழிவகை செய்திருக்கிறார்.
இதைப் பற்றி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, “மனித வளத்தை மேம்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது பெற்றோர்களின் கடமை மட்டுமல்ல; சமுதாயத்தினுடைய கடமை. நான் சமுதாய கடமையைச் செய்திருக்கிறேன். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண்களுக்கான கல்வி இவற்றில் என்னால் இயன்ற அளவு சமுதாய கடமையாக இதை செய்துவருகிறேன். நான் மூன்று குழந்தைகளுக்குக் கொடுத்துள்ள வைப்பு நிதி 20 ஆண்டுகளுக்குப் பின் இந்த மூன்று குழந்தைகளுக்கும் பாதுகாப்பு நிதியாக கிடைக்கும். அன்று அந்தக் குழந்தைகளின் மனதில் நான் இருப்பேன்” என்று கூறினார்.