
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் புயல் பாதிப்பிற்காக அரசு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, இந்த கிராமத்தில் சுமார் 2300 குடும்ப அட்டைகள் இருக்கும் நிலையில் சுமார் 1100 பேருக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதால் நிவாரணம் கிடைக்காத கிராம மக்கள் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது.
இந்த நிலையில் சாலை மறியல் நடந்த இடத்திற்கு மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் கீரமங்கலம், அறந்தாங்கி போலிசார் மற்றும் 50 க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலிசார் வந்திருந்தனர்.

போராட்டம் நடக்கும் தகவல் அறிந்து அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விடுபட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். ஆனால் அதை ஏற்காத மக்கள் பல முறை மனு கொடுத்துவிட்டோம். இனியும் செலவு செய்து மனு கொடுக்க முடியாது. குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் நிவாரணப் பொருளும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகையும் வழங்க வேண்டும். மேலும் இதுவரை நிவாரணம் கொடுக்கப்பட்டவர்கள் பட்டியல் மற்றும் நிவாரணம் வழங்கப்பட உள்ளவர்களின் பட்டியலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு ஒட்ட வேண்டும். அப்போது தான் முறைகேடுகளை தடுக்க முடியும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட தாசில்தார் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் கொடுத்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

அப்போது தாசில்தாரிடம் பேசிய எம்.எல்.ஏ மெய்யநாதன்.. அரசு நிவாரணத்தில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது. கூரை வீடு, ஓட்டு வீடு, மட்டுமின்றி காங்கிரீட் வீடுகளும், காலனி வீடுகளும் உடைந்துள்ளது. ஆனால் காங்கிரீட் வீடு, காலனி வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படுவதில்லை. அருகில் உள்ள ஆலங்குடி தாலுகாவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அறந்தாங்கி தாலுகாவில் மட்டும் பாரபட்சம் பார்க்கப்படுவதாக கூறினார்.
அப்போது எழுந்த ஒருவர்.. என் காலனி வீடு கட்டி 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. புயலில் மேலும் சேதமடைந்துவிட்டது. கணக்கெடுக்க வந்த அதிகாரி வீட்டிற்குள் சென்றவர் படம் எடுக்காமல் வெளியே ஓடிவந்து அவருக்கு மேல் அதிகாரிக்கு போனில் பேசினார். அப்போது காலனி வீட்டில் கம்பிகள் மட்டும் தான் இருக்கிறது. உடைந்து கொட்டுகிறது. படம் எடுக்கவே பயமாக இருக்கிறது என்று பேசிவிட்டு நிவாரணம் கிடைக்கும் என்று சொல்லிச் சென்றார். ஆனால் எனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று கூறினார். இதே போல பலரும் இடிந்த வீடுகளின் படங்களை காட்டினார்கள்.

பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் அங்கு வந்திருந்த மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் சென்ற மெய்யநாதன் எம்.எல்.ஏ அனைத்து கிராமங்களிலும் குறைவான அளவே நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதால் இப்படி மக்கள் போராட்டங்கள் நடக்கிறது என்றார்.
மேற்பனைக்காடு கிராமத்தில் சாலை மறியல் நடக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் மேற்பனைக்காடு செல்லும் ஒரு சில அரசு நகரப் பஸ்கள் கீரமங்கலத்திலேயே நிறுத்தப்பட்டது. அதனால் அந்த பஸ்சில் சென்ற பயணிகளும், மேலும் மேற்பனைக்காடு செல்ல கீரமங்கலத்தில் காத்திருந்த பொதுமக்களும் 5 கி.மீ. தூரம் வரை நடந்து சென்றனர்.
அதே போல பெரியார் இணைப்புச்சாலையில் பெரியார் கிராம பெண்கள் நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல கந்தர்வகோட்டை பகுதி என்று மாவட்டம் முழுவதும் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.