Published on 04/09/2019 | Edited on 04/09/2019
கலைஞரின் மகனும், முன்னாள் மத்தியமைச்சருமான மு.க. அழகிரிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் திமுகவில் தென்மண்டல அமைப்பு செயலாளராகவும் இருந்துள்ளார். கலைஞரின் மறைவுக்கு பிறகு அரசியலில் இருந்து சற்று விலகி இருந்தார். மு.க.அழகிரி தன் குடும்பத்தினருடன் மதுரை சத்யசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். கடந்த வாரத்தில் மு.க.அழகிரியின் மனைவி மற்றும் மருமகள் என குடும்பத்தினர் அனைவரும் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் மு.க.அழகிரிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக மு.க.அழகிரியின் இல்லத்திற்கே சென்ற மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்துள்ளது. அதனால் அவருக்கு லேசான தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டிருந்தது. பின்பு அதற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்தால் சரியாகி விடும் என்று கூறிவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. மேலும் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடு சென்றுள்ளதால் தன்னுடைய பேரன் இதயநிதி வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். மு.க.அழகிரிக்கு திடீர் உடல்நிலை சரியில்லை என்ற தகவலை கேட்டறிந்து தொண்டர்கள் அவரது வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து வருகின்றனர்.