விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார்க்குப்பத்தில் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தைத் துவங்கிவைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்பொழுது மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''கரோனாவால் இழந்த காலத்தை ஈடுகட்ட அதிகப்படியான முயற்சிகளை மாணவர்கள் செய்தாக வேண்டும். பள்ளி நேரத்தில் மட்டுமே மாணவர்களை மடைமாற்றம் செய்துவிட முடியாது. மிகப்பெரிய கல்விப் புரட்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் அடிக்கல் இந்த இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய விஷயங்களெல்லாம் சிறு சிறு அளவில்தான் தொடங்கப்பட்டது. நூற்றாண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியைத் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் வழியாகக் கொண்டு சேர்த்தது ஆரம்பக் கால திராவிட இயக்கம்.
திராவிடம் என்றால் என்ன என்ன என்று கேட்கும் சில கோமாளிகளும், அதைப்பற்றி அறியாதவர்களும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் திராவிடத்தினுடைய கொள்கை. மறந்துவிடக்கூடாது. வீட்டுக்கு வந்து கற்றுத்தரும் கடமையின் தொடர்ச்சிதான் ' இல்லம் தேடி கல்வி' என்கின்ற திட்டமாகும். எப்பொழுதுமே ஒரு நெருக்கடி ஏற்பட்டால் தான் ஒரு புதிய பாதை திறக்கும். கரோனா நெருக்கடியில் உதயமானதுதான் 'இல்லம் தேடி கல்வி' திட்டமாகும்'' என்றார்.