தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாக வேலை செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 10ம் தேதி சேலம் மாவட்டம் கெங்கவள்ளி பகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும். இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தினால் வரும் 2024ம் ஆண்டு அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். 2024ம் ஆண்டு வர இன்னும் 27 அமாவாசை தான் உள்ளது" என்றார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கு திமுக அமைச்சர் பி.கே.சேகர் பாபு பதிலடி தந்தார். இதுதொடர்பாக பேசிய அவர், " எத்தனை அமாவாசைகள் வந்தாலும் அதிமுக ஆட்சிக்கு வராது, அது வெறும் கனவாகத்தான் இருக்கும்" என்றார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இதுதொடர்பாக எந்த கருத்தையும் கூறாத தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக இன்று எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " அரசியல் அமாவாசைகள் யாரென்று தெரிந்துதான் மக்கள் அதிமுகவினரை புலம்பவிட்டுள்ளார்கள். அதிமுகவினருக்கு ஆக்கப்பூர்வ அரசியல் தெரியாது. இன்றைக்கு மட்டுமல்ல, எப்போதும் அவர்களுக்கு குறுக்குவழி அரசியல் மட்டுமே தெரியும். அவர்கள் வாய் திறந்தால் அமாவாசை அரசியல் மட்டுமே பேசுவார்கள். இதைத்தாண்டி அவர்களிடம் வேறு எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது" என்றார்.