தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரச்சார வேலைகளைச் செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய தலைவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போகிற இடங்களில் எல்லாம் ஆளும் கட்சியை விமர்சனம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் நாங்கள் நினைத்தால், தமிழக சட்டப்பேரவையை முடக்க செய்வோம், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று பேசியிருந்தார்.
இதற்கிடையே மதுரை மாநகராட்சி தேர்தலில் ஆதரவு திரட்டும் நோக்கில் திமுக பொறுப்பாளர்களுடன் இன்று மாலை காணொளிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, " திமுகவின் ஆட்சி இன்னும் 27 அமாவாசை மட்டும்தான் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தற்போது புதிதாக ஜோசியம் சொல்லி வருகிறார். இவர்கள் ஆட்சியில் அமைதியாக இருந்த மக்கள் அமைதிப்படைகளாக மாறி அவர்களை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்துள்ளார்கள். எனவே வாழும்காலம் எல்லாம் இவர்கள் அமாவாசைகளாகத்தான் இருப்பார்கள். அதிமுக அஸ்தமனத்தில் உள்ளது. எனவே இவர்கள் இப்படித்தான் தொடர்ந்து உளறி வருவார்கள். அதை நாம் யாரும் பெரிதுபடுத்த தேவையில்லை. பழனிசாமி யாரை மிரட்டி பார்க்கிறார், நான் மிசாவையே பார்த்தவன், என்னை அவரால் மிரட்ட முடியுமா? என்னை மிரட்டிவிட முடியும் என கற்பனையில் கூட கனவு காணாதீர்கள்" என்றார்.