Skip to main content

“எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்காக ஆயிரம் கூறுவார்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது” - முதலமைச்சர்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

MK Stalin addressed press after visiting mayiladuthurai

 

"வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்காக ஆயிரம் கூறுவார்கள். அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது. கடமையைச் செய்வோம்" என உணர்ச்சி பெருமிதத்தோடு கூறிவிட்டுச் சென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

 

கடந்த நவம்பர் 12ம் தேதி தமிழகத்திலேயே சீர்காழியில் ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழைக் கொட்டித் தீர்த்தது. இதனால் சீர்காழி நகரம் மட்டுமின்றி சீர்காழி தாலுக்கா முழுவதுமே தண்ணீரில் மூழ்கி தற்போது வரை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அரசு போர்க்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளிலும், மின் கம்பங்களைச் சரி செய்யும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

 

MK Stalin addressed press after visiting mayiladuthurai

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,67,500 ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பா, தாளடி பயிர்களில் 87,500 நிலப்பரப்பு மழைநீரால் சூழப்பட்டுள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாகக் கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள மொத்த சாகுபடி பரப்பான 30 ஆயிரம் ஏக்கரில் 25 ஆயிரம் ஏக்கர்  மழைநீரால் சூழப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டாரம் உமையாள்பதி கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தார். முன்னதாக பச்சை பெருமாள் நல்லூர் அரசுப் பள்ளியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களைச் சந்தித்த முதல்வர், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

 

MK Stalin addressed press after visiting mayiladuthurai

 

தொடர்ந்து, உமையாள்பதி ஆதிதிராவிடர் காலனி குடியிருப்புப் பகுதியை பார்வையிட்டார். பின்னர் உமையாள்பதி பகுதியில் வெள்ளம் சூழ்ந்த வயல்வெளிகளை நேரில் ஆய்வு செய்துவிட்டு அங்கிருந்து சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த நிவாரணம் வழங்கும் மேடைக்கு வந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

 

MK Stalin addressed press after visiting mayiladuthurai

 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், "பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் அனைவரும் திருப்தியாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அமைச்சர்கள் மெய்யநாதன், செந்தில் பாலாஜி, ரகுபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் பலரையும் இப்பகுதிக்கு அனுப்பி நிவாரண பணிகளை மேற்கொள்ள சொன்னேன். அவர்கள் அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளனர். இருந்த போதிலும், இது போதாதென நானும் நேரடியாக வந்து ஆய்வு செய்துள்ளேன். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஒரு சில குறைபாடுகள் உள்ளது. அது இன்னும் ஐந்து ஆறு தினங்களுக்குள் சரி செய்யப்படும். நிவாரணம் வழங்குவது குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கூறுவார்கள், அதையெல்லாம் நாம் கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. கணக்கெடுப்பு பணிகள் முழுமை அடைந்தவுடன் நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும். எதிர்க் கட்சிகள் அரசியல் செய்வதற்காக ஆயிரம் கூறுவார்கள், அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முழுமையான கணக்கெடுப்புக்குப் பிறகு நிவாரண தொகை அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்