Skip to main content

ஓடும் பேருந்தில் செவிலியரிடம் ஆபாசப் பேச்சு; ஓட்டுநர் பணியிடைநீக்கம்!

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

Misbehave to nurse government bus driver suspended
மாதிரி படம்  

 

ஓடும் பேருந்தில், பயணியாக வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், செவிலியரிடம் ஆபாசமாகப் பேசி தொந்தரவு செய்ததால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

புதுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதான பெண் ஒருவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இவர், மார்ச் 22ம் தேதி, திருச்சியில் இருந்து சேலத்திற்கு அரசுப் பேருந்தில் வந்தார்.

 

அந்தப் பெண் அமர்ந்து இருந்த இருக்கைக்குப் பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்த இருவர், செவிலியரை வர்ணித்து ஆபாசமாகப் பேசிக்கொண்டு வந்தனர். இதுகுறித்து அவர், பேருந்து ஓட்டுநரிடம் புகார் அளித்தார். ஆனால், அவர் புகார் குறித்து கண்டுகொள்ளாததோடு, ஆபாசமாகப் பேசியபடி வந்த நபர்களையும் கண்டிக்கவில்லை எனத் தெரிகிறது. 

 

இந்நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு அந்தப் பேருந்து வந்து சேர்ந்ததும், அந்த செவிலியர் பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் ராணி இதுகுறித்து விசாரித்தார். விசாரணையில், திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (37), அவருடைய 35 வயது நண்பர் ஆகியோர் அந்த செவிலியர் பற்றி ஆபாசமாகப் பேசி வந்ததும், சசிகுமார் என்பவர் கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. 

 

இதையடுத்து, அரசுப் பேருந்தில் பெண் பயணிக்கு தொந்தரவு கொடுத்ததாக ஓட்டுநர் சசிகுமாரை கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உடனடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். அவரிடம் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினரும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்