தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மானியக் கோரிக்கைகளும், விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை மற்றும் கைத்தறி துணிநூல் துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது.
இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது துறை குறித்தான விவகாரங்களை பேசினார். அப்போது அவர், “எதிர்க்கட்சி கொறடா அண்ணன் வேலுமணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளை காண டிக்கெட் வேண்டும்; அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டார்.
‘கிரிக்கெட் விளையாடும் போது கலைஞர் என்ன செய்வார்’ - சட்டமன்றத்தில் உதயநிதி சுவாரஸ்ய பேச்சு
நாலு வருஷமா இங்க மேட்சே நடக்கல; நீங்க யாருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தீங்க, எப்போ வாங்கிக் கொடுத்தீங்கன்னு தெரியல. நான் என்னோட சொந்த செலவில் என் தொகுதியில் இருக்கும் 150 கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் டிக்கெட் வாங்கிக் கொடுத்து போட்டியை பார்க்க வைத்து வருகிறேன்.
பி.சி.சி.ஐ., ஐ.பி.எல்.-ஐ நடத்துகிறது. உங்கள் நெருங்கிய நண்பர் அமித்ஷாவின் மகன், ஜெய்ஷா தான் அதற்கு தலைவர். நாங்க சொன்னா அவர் கேட்கமாட்டார்; நீங்க சொன்னா அவர் கேட்பார்” (அவையில் சிரிப்பலை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குலுங்கி குலுங்கி சிரித்தார்) அதனால் நீங்க அவரிடம் சொல்லி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு ஐந்து டிக்கெட் கொடுத்தாக்கூட போதும். நாங்க காசு கொடுத்து வாங்கிக்கிறோம். அப்பறம் அத வேறு ஏதாவது கணக்கில் சேர்த்துடுவீங்க” என்று பேசினார். அமைச்சர் உதயநிதியின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.