தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசபுரம் பண்ணை வீட்டில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொணடனர்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "உசிலம்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அருகில் மூக்கையாத்தேவர் சிலையை வைப்பதாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, அரசாணையும் வெளியிடப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியில் இருந்து மூக்கையாத்தேவர் சிலையை அமைத்து கொடுப்பதாக சொன்ன வாக்குறுதியின்படி மூக்கையாத்தேவர் சிலை அமையும் இடத்தை ஆய்வு செய்வதற்காக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக உசிலம்பட்டி நகருக்கு வருகை தந்து இடத்தை பார்வையிட வேண்டும் என்று சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர் அங்கு வருகை தர உள்ளார்.
அது சம்மந்தமான ஆலோசனையே இங்கே நடத்தப்பட்டது. இதனிடையே அக்டோபர் 7- ஆம் தேதி அ.தி.மு.க. கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படுமா? அல்லது அறிவிக்கப்படாதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் எப்பொழுதும் ஒன்றாகவே இணைந்து முடிவெடுப்பார்கள். அந்த முடிவு சரியான முடிவாக இருக்கும். அதேபோல் தலைமை வழி காட்டும் அந்த வழிகாட்டுதலின்படி நடப்போம்" என கூறினார்.